2015-07-16 16:04:00

திருத்தந்தையின் திருமடல், தினசரி வாழ்வைத் தொடுகிறது


ஜூலை,16,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடல், நம் தினசரி வாழ்வில் நுழைந்து, நாம் பின்பற்றும் பல பழக்கங்களை கேள்விக்குள்ளாக்குகின்றது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலை மையப்படுத்தி, ஜூலை 15, இப்பதனன்று வத்திக்கானில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர், பேராயர், ரீனோ பிசிக்கெல்லா (Rino Fisichella) அவர்கள் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

'நற்செய்தியின் மகிழ்வு' என்ற அறிவுரை மடல் வழியே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய, "நம்பிக்கையைத் திருடவேண்டாம்" என்ற கருத்து, 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலிலும் அடிக்கடி இடம்பெற்றுள்ளதைக் காணலாம் என்று பேராயர் பிசிக்கெல்லா அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

தனி மனித மாண்பைச் சிதைப்பதற்கு இவ்வுலகில் உருவாகியுள்ள பல்வேறு வழிகளுக்கு ஒரு சவாலாக, மாற்றாக, மனித மாண்பை நிலைநாட்டும் முயற்சிகள் தேவைப்படுகின்றன என்பதை திருத்தந்தையின் திருமடல் நமக்கு நினைவுறுத்துகிறது என்று பேராயர் பிசிக்கெல்லா அவர்கள் எடுத்துரைத்தார்.

இவ்வுலகில் நாம் காணும் முரண்பாடான பல கருத்தியல்களுக்கு ஒரு மாற்றாக, இவ்வுலகைப் பேணிக் காக்கும் வகையில் நம் தினசரி வாழ்வின் பழக்க வழக்கங்கள் மாற்றப்படவேண்டும் என்பதை, தன் திருமடலின் வழி திருத்தந்தை வலியுறுத்துகிறார் என்பதை பேராயர் பிசிக்கெல்லா அவர்களின் உரை தெளிவுபடுத்தியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.