2015-07-16 15:57:00

திருத்தந்தை - புனித போஸ்கோவின் வழிகள், இன்றும் ஏற்புடையவை


ஜூலை,16,2015. ஒன்றும் செய்யாமல் நின்று வேடிக்கை பார்ப்பதற்குப் பதில், முன்வந்து செயல்களில் இறங்கவேண்டும் என்பதை புனித தோன் போஸ்கோ நமக்குச் சொல்லித் தருகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஜூலை 16, இவ்வியாழனன்று புனித தோன் போஸ்கோ பிறந்ததன் 200ம் ஆண்டு சிறப்பிக்கப்படும் வேளையில், அப்புனிதர் நிறுவிய சலேசிய துறவு சபையின் அகில உலகத் தலைவர், அருள்பணி Ángel Fernández Artime அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள சிறப்பு மடலில் இவ்வாறு கூறியுள்ளார்.

தூரின் நகருக்கு அண்மையில் வந்திருந்தபோது, சகாய அன்னை பசிலிக்காவில் சலேசியக் குடும்பத்தினருடன் தான் மேற்கொண்ட சந்திப்பை, இம்மடலில் நினைவுகூரும் திருத்தந்தை, புனித தோன் போஸ்கோ காட்டும் ஆன்மீக, மற்றும் மேய்ப்புப்பணி வழிகளை அனைவரும் பின்பற்ற வேண்டிய அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.

கடந்த இருநூறு ஆண்டுகளில் உலகமும், ஐரோப்பாவும் பல வழிகளில் மாறியுள்ளன என்றாலும், இளையோரின் உள்ளங்கள் அதிகம் மாறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் திருத்தந்தையின் மடல், இளையோர், பல வழிகளிலும் தவறுதலாக வழிகாட்டப் பட்டாலும், கடவுளையும், அயலவரையும் சந்திப்பதில் இளையோர் கொண்டுள்ள ஆர்வம் குறையவில்லை என்று கூறியுள்ளது.

"Da mihi animas" அதாவது, ஆன்மாக்களைத் தாருங்கள், என்று புனித தோன் போஸ்கோ எழுப்பிய செபத்தை விருதுவாக்காகக் கொண்டு இயங்கும் சலேசியத் துறவு சபை, கல்விப் பணியின் வழியாக நற்செய்தி அறிவிப்புப் பணியை ஆற்றமுடியும் என்பதை இப்புனிதர் வழியே கற்றுக்கொள்ள வேண்டும் என்று திருத்தந்தையின் மடல் அழைப்பு விடுக்கிறது.

படிப்பு, செபம், வேலை என்ற மூன்று முக்கிய அம்சங்களையும் தகுந்த வகையில் இணைத்து, இளையோரை வழிநடத்திய புனித தோன் போஸ்கோவின் வழிமுறைகள், இன்றும் நமக்கு ஏற்புடைய வழிகளாக உள்ளன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

1815ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி, இத்தாலியின் Piedmont என்ற இடத்தில் பிறந்த புனித தோன் போஸ்கோ, 1888ம் ஆண்டு, சனவரி 31ம் தேதி, தன் 72வது வயதில் தூரின் நகரில் இறையடி சேர்ந்தார். இவர், 1934ம் ஆண்டு, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.