2015-07-16 16:25:00

ஈரான் அணு ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல்-அமெரிக்க ஆயர் பேரவை


ஜூலை,16,2015. உலகின் ஆறு நாடுகள், ஈரான் நாட்டுடன் செய்துள்ள அணு ஒப்பந்தம், மனித சமுதாயத்தின் அமைதிப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல் என்று அமெரிக்க ஆயர் பேரவையின் ஓர் அதிகாரி கூறியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகளுக்கும், ஈரான் நாட்டிற்கும் இடையே, ஜூலை 14, இச்செவ்வாயன்று இடம்பெற்ற ஒப்பந்தம் குறித்து மகிழ்வை வெளியிட்ட அமெரிக்க ஆயர் பேரவையின் நீதி, அமைதிப் பணிக்குழுவின் தலைவர், ஆயர் Oscar Cantu அவர்கள், இவ்வாறு கூறினார்.

உரையாடல், சமரச முயற்சிகள் என்ற இரு எண்ணங்கள், இந்த ஒப்பந்தத்தின் மையமாக அமைந்தது, நம்பிக்கை தருகிறது என்று கூறிய ஆயர் Cantu அவர்கள், 2007ம் ஆண்டு முதல், அமெரிக்க ஆயர் பேரவை, ஈரான் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்குமாறு அமெரிக்க அரசைக் கேட்டு வந்தது என்பதையும் நினைவுறுத்தினார்.

இந்த ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, அமெரிக்க பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து விவாதங்களிலும் அமைதியை மையப்படுத்திய பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, ஈரான் நாட்டு மக்கள், இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இச்செவ்வாய் இரவு, சாலைகளில் கூடி தங்கள் மகிழ்வைத் தெரிவித்தனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

இரவு நேரக் கொண்டாட்டங்கள், ஈரான் நாட்டில் தடை செய்யப்பட்டிருந்தாலும், கடந்த 12 ஆண்டுகளாக நிலவி வந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன என்பது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதால், இந்தக் கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்பட்டன என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / AsiaNews








All the contents on this site are copyrighted ©.