2015-07-16 16:20:00

இளையோரைக் காக்க சிலே ஆயர் பேரவையின் விதிமுறைகள்


ஜூலை,16,2015. சிறுவர்களையும், இளையோரையும் தவறான வழிகளில் பயன்படுத்தும் அருள் பணியாளர்களுக்கு சிலே நாட்டு தலத்திருஅவையில் இடமில்லை என்று அந்நாட்டு ஆயர் பேரவை கூறியுள்ளது.

ஜூலை 16, இவ்வியாழனன்று கொண்டாடப்பட்ட புனித கார்மேல் அன்னை திருநாளன்று, சிலே நாட்டு ஆயர் பேரவை இளையோரை மையப்படுத்தி முக்கிய முடிவுகளை அமல்படுத்தியுள்ளது.

பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகும் இளையோரைக் காக்கும் வகையில் சிலே ஆயர் பேரவை உருவாக்கியுள்ள விதிமுறைகள், திருப்பீடத்தால் அங்கீகரிக்கப்பட்டு, இவ்வியாழனன்று வெளியிடப்பட்டன.

சிலே நாட்டு ஆயர் பேரவையைச் சேர்ந்த ஆயர் Alejandro Goic அவர்கள், இந்த விதிமுறைகளை வெளியிட்டபோது, கத்தோலிக்க உலகில் சிறப்பாகக் கொண்டாடப்படும் கார்மேல் அன்னை திருநாளன்று, இந்த விதிமுறைகள் வெளிவருவது பொருத்தம் என்று கூறினார்.

சிலே நாட்டின் Maipu என்ற இடத்தில் அமைந்துள்ள கார்மேல் அன்னை திருத்தலத்தில், "சிலே நாடு: மரியன்னை ஒரு குடும்பத்தை உருவாக்குகிறார்" என்ற மையக் கருத்துடன், கார்மேல் அன்னை திருநாள் கொண்டாடப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.