2015-07-15 18:35:00

மருத்துவ உதவிகள் வறியோரை அதிகமாகச் சென்றடைய வேண்டும்


ஜூலை,15,2015. புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் நோய் ஆகியவற்றிலிருந்து குணமாகும் மருந்துகளும், மருத்துவ உதவிகளும் சமுதாயத்தின் வறியோரை இன்னும் அதிகமாகச் சென்றடைய வேண்டும் என்று தென் ஆப்ரிக்க ஆயர் பேரவை கூறியுள்ளது.

புற்று நோயைக் குணமாக்கக்கூடிய பல மருத்துகள், உரிமம் பெற்றவைகளாக அறிவிக்கப்பட்டு, அவற்றின் விலை அதிகரித்திருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ள ஆயர் பேரவையின் நீதி, அமைதி பணிக்குழு, மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் வறியோரை மனதில் வைத்து செயல்படவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளது.

மருந்து நிறுவனங்களுக்கு தனிப்பட்ட உரிமங்களை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தென் ஆப்ரிக்க அரசு, ஒரு சில பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கும் மறைமுகமான அழுத்தங்களுக்கு அடிபணியாமல், வறியோரின் தேவைகளை முன்னிறுத்த வேண்டும் என்று ஆயர் பேரவையின் நீதி, அமைதி பணிக்குழுவின் தலைவர், ஆயர் ஆபெல் கபூசா (Abel Gabuza) அவர்கள் Fides செய்திக்கு அளித்த குறிப்பில் கூறியுள்ளார்.

தனிப்பட்ட மருத்துவ நிறுவனங்களின் இலாபத்தை விட, மக்களின் உரிமைகளும், உயிரும் முக்கியம் என்பதை தென் ஆப்ரிக்க அரசு உணரவேண்டும் என்று ஆயர் பேரவையின் நீதி, அமைதி பணிக்குழு தன் அறிக்கையில் கூறியுள்ளது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.