2015-07-15 17:53:00

புளூட்டோவை நெருங்கியது நியூ ஹொரைசன்ஸ் விண்கலம்


ஜூலை,15,2015. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் நியூ ஹொரைசன்ஸ் விண்கலம், சூரிய மண்டலத்தின் கடைசிக் கோளமாகிய புளூட்டோவை நெருங்கியுள்ளது.

2006ஆம் ஆண்டில் பயணத்தைத் துவங்கிய நியூ ஹொரைசன்ஸ், கடந்த 9 வருடங்களாக தொடர்ந்து பயணம் செய்து, சூரியக் குடும்பத்தின் வெளிவிளிம்பை நெருங்கியுள்ளது. இதற்காக இந்த விண்கலம் ஐநூறு கோடி கிலோமீட்டர்கள் பயணித்துள்ளது.

ப்ளுட்டோ கோளத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்காகவே தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம், அச்சிறிய கோளத்தை நெருங்கியதை அடுத்து, இத்திட்டக் குழுவின் உறுப்பினர்கள், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

புளூட்டோ கிரகம் கைப்பர் பெல்ட் எனப்படும் சூரிய வலயத்தின் விளிம்பில் உள்ளது. இது வெற்றிட வலயம் என முன்னர் கருதப்பட்டது. ஆனால், இதில் லட்சக்கணக்கான உறைபனி உலகங்களும், விண்கற்களும் உலவுவதாக அறிவியலாளர்கள் தற்போது நம்புகின்றனர்.

நானூற்று அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நமது சூரிய குடும்பம் உருவானபோது ஓரமாக ஒதுங்கிய குப்பை இவை.

நியூ ஹொரைசன்ஸ் விண்கலம், ப்ளுட்டோவையும் அதன் 5 நிலவுகளையும் மிக வேகமாக சுற்றிவந்து, சூரிய குடும்பம் குறித்து இதுவரை நாம் அறிந்திராத பல செய்திகளை சேகரித்து வருகிறது. 

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.