2015-07-15 17:40:00

பரகுவாய் நாட்டில் திருத்தந்தையின் Scholas Occurrentes


ஜூலை,15,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பரகுவாய் நாட்டில் தன் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்ட வேளையில், Bañado Norte மாவட்டத்தில் Asuncion என்ற இடத்தில், Scholas Occurrentes என்ற திட்டத்தைத் துவக்கி வைத்தார்.

கலை, விளையாட்டு, மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலகெங்கும் உள்ள பள்ளிகளில், ‘சந்திக்கும் கலாச்சாரத்தை’ வளர்ப்பதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் துவக்கப்பட்டுள்ள ஒரு முயற்சி Scholas Occurrentes என்ற திட்டம்.

பல்வேறு நாடுகளில் பரவியுள்ள இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பரகுவாய் நாட்டில் வறியோர் அதிகம் வாழும் பகுதி ஒன்றில், Scholas Occurrentes திட்டத்தை ஜூலை 12, இஞ்ஞாயிறன்று திருத்தந்தை துவக்கி வைத்தார்.

வன்முறைச் சூழல்களில் வளரும் இளையோர், வளர் இளம் பருவத்திலேயே தாய்மை அடையும் இளையோர் என்ற இரு பிரச்சனைகளைத் தீர்க்கும் ஒரு வழியாக Scholas Occurrentes முயற்சி அந்நாட்டில் துவங்கப்பட்டுள்ளதென்று வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கூறியுள்ளது.

பரகுவாய் நாட்டில் துவங்கப்பட்டுள்ள இந்த முயற்சியில், அந்நாட்டு கல்வி, கலாச்சார அமைச்சகமும் இணைந்து உழைப்பதாக உறுதி அளித்துள்ளதென்று L'Osservatore Romano மேலும் கூறியுள்ளது.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வெளியிட்ட Twitter செய்தியில், "நமது எண்ணங்களை மாற்றும் நேரம் இது; உலகில் பசியால் துன்புறுவோர், நமது செயல்பாடுகளால் பாதிக்கப்படுவதில்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் எண்ணங்களை நிறுத்தவேண்டும்" என்ற வார்த்தைகளை வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.