2015-07-15 18:05:00

திருமடலின் தாக்கம் - டில்லியில் இளையோர் ஊர்வலம்


ஜூலை,15,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுற்றுச்சூழலை மையப்படுத்தி, 'இறைவா, உமக்கே புகழ் - நம் பொதுவான இல்லத்தைப் பேணுதல்' என்ற தலைப்பில் அண்மையில் வெளியிட்ட திருமடல் குறித்த விழிப்புணர்வை உருவாக்க டில்லி மாநகரில் இளையோர் ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர்.

காரித்தாஸ் இந்தியா என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு உருவாக்கியுள்ள Pope4Planet என்ற விளம்பர முயற்சியின் ஓர் அங்கமாக, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், இளையோர் கடந்த ஞாயிறன்று இந்த முயற்சியில் ஈடுபட்டனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இவ்வாண்டு நவம்பர் மாதம், காலநிலை மாற்றம் குறித்து ஐ.நா. அவை ஏற்பாடு செய்துள்ள உலக உச்சி மாநாட்டு உறுப்பினர்களுக்கு, இளையோர் கையெழுத்திட்ட ஒரு விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது என்று UCAN செய்தி கூறுகிறது.

திருத்தந்தையின் சுற்றுமடலைப் பின்னணியாகக் கொண்டு, சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை உருவாக்க, காரித்தாஸ் இந்தியா அமைப்பு, மேலும் பல முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதென்று காரித்தாஸ் இயக்குனர் அருள்பணி Frederick D'Souza அவர்கள் கூறினார். 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.