2015-07-15 18:29:00

இஸ்லாமியருக்கு ஆதரவாக பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை


ஜூலை,15,2015. பிலிப்பின்ஸ் நாட்டின் Mindanao பகுதியின், இஸ்லாமிய சிறுபான்மையினருக்கென உருவாக்கப்படும் தனிப்பட்டச் சட்டங்கள், மனித உரிமைகள், நன்னெறி விழுமியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டுமென்று, பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, பிலிப்பின்ஸ் பாராளு மன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் Bangsamoro அடிப்படைச் சட்டங்கள், மனித மாண்பையும், நிலையான அமைதியையும் உருவாக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Mindanao பகுதியை பிலிப்பின்ஸ் நாட்டிலிருந்து பிரிக்கவேண்டும் என்று போராடி வந்த Moro இஸ்லாமிய விடுதலை இயக்கம், தன் தீவிரவாதப் போக்கை விடுத்து, பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருப்பதால், அப்பகுதிக்குரிய தனிப்பட்ட சலுகைகள், மனித உரிமைகள் அடிப்படையில் வழங்கப்படவேண்டும் என்று, பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை வேண்டுகோள் விடுத்திருப்பதாக, ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய இரு மதங்களும் போற்றும் விவிலியம், மற்றும் குரான் ஆகிய இரு வேத நூல்களும் அமைதியை வலியுறுத்தும் நூல்கள் என்று கூறியுள்ள ஆயர் பேரவை, இவ்விரு நூல்களிலும் மதிக்கப்படும் மரியா, அமைதியின் தூதராக செயலாற்றவேண்டும் என்ற வேண்டுதலையும் எழுப்பியுள்ளது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.