2015-07-14 15:38:00

திருத்தந்தை - விமானப் பயணத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு


ஜூலை,14,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 9வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து உரோம் திரும்பிய நீண்ட நேர விமானப் பயணத்தில் பத்திரிகையாளர்களுடன் 64 நிமிடங்கள் செலவழித்து, கிரேக்க நாட்டின் பிரச்சனை, சமய சுதந்திரம், குடும்பம் எதிர்கொள்ளும் நெருக்கடி, அடித்தட்டு சமூக இயக்கங்களுக்கு ஆதரவு என, அரசியல் முதல் செல்பி புகைப்படங்கள் வரை பத்திரிகையாளர்களின் 14 கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

ஈக்குவதோர், பொலிவியா, பரகுவாய் ஆகிய மூன்று இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்துள்ள இவ்வேளையில், இலத்தீன் அமெரிக்கத் திருஅவைக்கு வழங்கிய செய்தி பற்றிக் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வளவு சிறாரை நான் ஒருபோதும் பார்த்ததில்லை, இந்த இளம் திருஅவையை ஊக்குவிக்க விரும்புகிறேன், இத்திருஅவை நம் அனைவருக்கும் நிறைய கற்றுக்கொடுக்க முடியும் என்று கூறினார்.

தொழில் உலகுக்கு எதிராக விளங்கும் சமூக இயக்கங்கள் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, இந்த இரு இயக்கங்களுக்கும் ஒரே மாதிரியான செய்தியையே, அதாவது திருஅவையின் சமூகக் கோட்பாட்டுச் செய்தியையே கூற விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

வருகிற செப்டம்பரில் கியூபாவுக்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் வேளையில், அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பொருளாதார அமைப்புகள் குறித்த திருத்தந்தையின் கருத்துக்களை அந்நாட்டில் சிலர் விமர்சிக்கிறார்கள் என்று கேட்டபோது, ஒவ்வொரு விமர்சனத்தையும் ஏற்று, அது குறித்து ஆராய்ந்து, பின்னர் அது குறித்துப் பேச வேண்டும் என்று கூறினார்.

விமர்சிப்பவர்களோடு நான் உரையாடல் நடத்தவில்லையென்றால், எனது கருத்தை வெளிப்படுத்துவதற்கு எனக்கு உரிமை கிடையாது என்றுரைத்த திருத்தந்தை, இந்த விமர்சனங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் கியூபாவுக்கும் இடையே இடம்பெற்ற உரையாடலுக்கு வத்திக்கான் இடைநிலை வகித்தது குறித்த கேள்விக்கும் பதிலளித்த திருத்தந்தை, இது இவ்விரு நாடுகளின் நன்மனத்தின் பலனாகும், இதனால் கிடைத்த புகழ் இவ்விரு நாடுகளையே சாரும் என்றும் கூறினார்.

ஏழைகளுக்காக குரல் கொடுக்கும் திருத்தந்தை, நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏன் ஆதரவு தருவதில்லை என்று ஒரு நிருபர் கேட்டபோது, அந்நிருபருக்கு நன்றி தெரிவித்ததோடு, இவ்விவகாரத்தில் திருஅவையின் சமூகப் போதனைகளுக்குள் இன்னும் ஆழமாகச் செல்வதாக உறுதியளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கொலம்பியாவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னேற வேண்டுமெனவும், தேவைப்பட்டால் இதற்கு திருப்பீடம் உதவும் எனவும் தெரிவித்தார் திருத்தந்தை.

ஜூலை 5ம் தேதி வத்திக்கானிலிருந்து ஈக்குவதோர் நாட்டுக்குப் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈக்குவதோர், பொலிவியா பரகுவாய் ஆகிய மூன்று தென் அமெரிக்க நாடுகளில் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து ஜூலை 13, இத்திங்கள் பிற்பகல் 1.37 மணிக்கு உரோம் வந்து சேர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.