2015-07-14 16:06:00

சிட்னி கடல் பகுதியில் 5 கோடி ஆண்டு எரிமலைகள் கண்டுபிடிப்பு


ஜூலை,14,2015. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை ஒட்டிய கடல் பகுதியில் வரிசையாக சில எரிமலைகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ஆனால் இவை வெகுகாலத்துக்கு முன்பே செயலற்றுப் போனவை என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

 காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை CSIRO ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில், சிட்னி நகரை ஒட்டிய கடல் பகுதியில் 250 கிலோ மீட்டர் தூரத்தில், 4.9 கிலோ மீட்டர் ஆழத்தில் வரிசையாக சில எரிமலைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இக்கடல் பகுதியில், பெருங்கடல் நண்டுகளைத் தேடியபோது கடல்மேற்பரப்புக்கு கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர்கள் அடியில் இந்த எரிமலைகள் இருப்பது தற்செயலாக  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட நான்கு எரிமலைகளில் பெரியது கடல் மட்டத்திலிருந்து எழுநூறு மீட்டர் உயரம் கொண்டுள்ளது என்றும், அந்த எரிமலையின் முகப்பு ஒன்றரை கிலோ மீட்டர் அகலம் கொண்டுள்ளது என்றும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

இந்த எரிமலைகள் நீண்ட காலத்துக்கு முன்பே செயலற்றுப் போய்விட்டன என்றாலும், ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து நிலப்பரப்புகள் நாற்பத்தெட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தனியாகப் பிரிந்தது பற்றி நாம் இன்னும் அதிகமாக அறிவதற்கு இந்த எரிமலைகள் உதவும் என அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.

இந்த ஆய்வை நடத்திய குழுவின் தலைமை அறிவியலாளர் Iain Suthers அவர்கள் இது பற்றி பத்திரிகையாளரிடம் பேசியபோது இந்தக் கண்டுபிடிப்பு வியப்பைத் தந்தது என்று கூறினார். 

நியூசிலாந்தில் வெடிக்கக்கூடிய எரிமலைகள் இன்றும் பல உள்ளன.

ஆனால் ஆஸ்திரேலியாவில் கடைசியாக ஒரு எரிமலை வெடித்தது ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால் என்று கருதப்படுகிறது.

ஆதாரம் : BBC/ABC/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.