2015-07-14 16:26:00

அமைதி ஆர்வலர்கள் : 1989ல் நொபெல் அமைதி விருது(Dalai Lama)


ஜூலை,15,2015. “எப்பொழுதெல்லாம் இயலுமோ அப்பொழுதெல்லாம் அன்பு காட்டுங்கள். இது எப்போதுமே இயலக்கூடியதே. மகிழ்வு என்பது எப்போதும் தயாராக இருப்பதல்ல, ஆனால், மகிழ்வு என்பது ஒருவருடைய சொந்தச் செயல்களால் கிடைப்பது. நாம் வாழ்வதன் நோக்கமே மகிழ்வாக இருப்பதே”. இவ்வாறு சொன்னவர் திபெத் புத்தமதத் தலைவர் 14வது தலாய் லாமா. இவருக்கு 1989ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. திபெத் மக்கள் தங்களின் சுதந்திரப் போராட்டத்தில் வன்முறையைப் பயன்படுத்த வேண்டாம் என்று தொடர்ந்து இவர் வலியுறுத்தி வருவதற்காக இவ்விருது வழங்கப்படுவதற்கு முக்கிய காரணம் என்று, அமைதி விருதுக்கு ஆர்வலர்களைத் தேர்ந்தெடுக்கும் நார்வே நொபெல் குழு அறிவித்தது. மேலும், 1989ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சீனப் படைகளால் நசுக்கி ஒடுக்கப்பட்ட சீன மாணவர்கள் தலைவர்களின் சனநாயக இயக்கம் மற்றும் சீனாவில் நடந்துவரும் சனநாயக ஆதரவு முயற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக இவ்விருது தலாய் லாமா அவர்களுக்கு வழங்கப்படுவதாக அவ்விருதுக் குழு கூறியது.

14வது தலாய் லாமா அவர்களின் இயற்பெயர் Lhamo Döndrub (அல்லதுThondup). இவர், திபெத்தின் வடகிழக்கிலுள்ள Amdoவில் 1935ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தார். இந்த ஊர் சீனாவில் Taktser என அறியப்படுகிறது. இவரது குடும்பத்தில் பிறந்த 16 குழந்தைகளில் 5வது குழந்தை இவர். இக்குழந்தைகளில் 7 பேர் இளவயதிலே இறந்துவிட்டனர். திபெத் புத்த மதத்தின் தலைவரான 13வது தலாய் லாமா இறந்த பின்னர், பல மாதங்கள் மக்கள் அவரின் வழிவருபவரைத் தேடினார்கள். 13வது தலாய் லாமாவின் உடல் முதலில் தென் கிழக்காகவும், பின், வடகிழக்காகவும் திரும்பியதால் அத்திசையை நோக்கி தேடத் தொடங்கினர். அச்சமயத்தில் கிடைத்த மேலும் பல ஆன்மீக அடையாளங்களின்படி, புத்தமத அதிகாரிகள், 2 வயதான Lhamo Döndrubஐ 14வது தலாய் லாமாவாகத் தேர்ந்தெடுத்தனர். அதோடு, 13வது தலாய் லாமா பயன்படுத்திய பொம்மைகள், அவர் பயன்படுத்தாத சில பொருள்கள், சில திருப்பண்டங்கள் என, பல பொருள்களை 2 வயதுச் சிறுவன் Lhamo Döndrubடம் கொடுத்தபோது அவன் சரியாக 13வது தலாய் லாமா பொருள்களைத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எனவே Lhamo Thondup, 13வது தலாய் லாமாவின் மறுபிறவி என உறுதி செய்யப்பட்டு அச்சிறுவனுக்கு Tenzin Gyatso (முழுப்பெயர் Jetsun Jamphel Ngawang Lobsang Yeshe Tenzin Gyatso) என்ற புத்தமதப் பெயரை சூட்டினார்கள்.

Tenzin Gyatso என்றால், தூய ஆண்டவர், நேர்மையான மகிமை, கருணையுள்ளவர், விசுவாசத்தைப் பாதுகாப்பவர், ஞானத்தின் பெருங்கடல் என்ற பொருள். இவர் தனது 15வது வயது வரை 14வது தலாய் லாமா என்று அரியணையில் அமர்த்தப்படவில்லை. தலாய் லாமாக்கள், திபெத்திய புத்த மதத்தின் புதிய குழுவாகிய Gelug குழுவின் முக்கிய துறவிகள். இந்தப் புத்தமதக் குழு Ganden Tripasக்களால் தலைமை தாங்கப்படுகின்றது. இந்தத் தலைமைகளில் நீண்ட காலம் வாழ்பவர் Tenzin Gyatso என்ற 14வது தலாய் லாமா.  திபெத்தியர்கள் பொதுவாக தலாய் லாமாக்களை மீட்பர்கள், பிரசன்னமாக இருப்பவர்கள், முத்துக்கள் என்றே கருதுகின்றனர். இந்தியாவின் தர்மசாலாவில் நாடுகடத்தப்பட்டு வாழும் திபெத்திய நாடு கடந்த அரசின் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் உள்ளார் 14வது தலாய் லாமா. இவர், இவரது வழிவந்தவர்களின் மறுபிறவி என திபெத்தியர்கள் நம்புகின்றனர். தன்னாட்சியுடைய அரசாக, சனநாயக அரசாக திபெத்தை உருவாக்குவதற்கு ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக இவர் முயற்சித்து வருகிறார். 

தலாய் லாமாக்கள், புத்தமதத்தின் முக்கிய தெய்வமாகிய Avalokitesvaraவின் மறுபிறவியாகவும், கருணையின் மறுஉருவமாகவும் நோக்கப்படுகின்றனர். அதோடு, தலாய் லாமாக்கள், விழிப்புணர்வு அடைந்த மனிதர்களாக, மனித சமுதாயத்தின் நன்மைக்காக, தங்களின் இறப்புக்குப் பின்னர் மீண்டும் பிறக்கின்றவர்களாகவும் கருதப்படுகின்றனர். தலாய் என்றால் மங்கோலிய மொழியில் பெருங்கடல் என்று பொருள். தாமா என்றால் ஆன்மீகத் தலைவர் அல்லது குரு என்று பொருள். எனவே தலாய் லாமா என்றால், பெருங்கடல் ஆசிரியர், அதாவது பெருங்கடல் போன்று ஆழமுடைய ஆன்மீகப் போதகர் என்று பொருள். 14வது தலாய் லாமா அவர்கள், தனது 6வது வயதில் சமயக் கல்வியைத் தொடங்கினார். திபெத்திய கலை, சமஸ்கிருதம், மருத்துவம், புத்தமத மெய்யியல் என பலவற்றைக் கற்றார். 11வது வயதில், ஆஸ்ட்ரிய மலையேறி ஹெய்ன்ரிச் ஹாரர் என்பவரிடமிருந்து வெளியுலகம் பற்றித் தெரிந்துகொண்டார். 1950ம் ஆண்டு, தனது 15வது வயதில் இவர் 14வது தலாய் லாமாவாக, முழு அரசியல் அதிகாரத்தை ஏற்றார்.

எனினும், இவரது அரசு சிறிது காலமே நீடித்தது. ஏனெனில் அதே ஆண்டு அக்டோபரில் சீனா, திபெத்தை ஆக்ரமித்தது. திபெத் சிறிதளவே அதனை எதிர்த்தது. 1954ம் ஆண்டு, தலாய் லாமா பெய்ஜிங் சென்று மாவோ சே துங் மற்றும் பிற சீன அதிகாரிகளுடன்  அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், 1959ம் ஆண்டில் சீனப் படைகளால் திபெத் மக்கள் தொடர்ந்து நசுக்கப்பட்டனர். தலாய் லாமாவை சீன அரசு கொலை செய்யத் திட்டமிடுகின்றது என்று உணர்ந்து தலாய் லாமாவும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் வட இந்தியாவின் தர்மசாலாவுக்கு வந்து அங்கு ஓர் அரசை நிறுவினர். தலாய் லாமா, கம்யூனிச மெய்யியலோடு ஒத்துப் போகாதவர், இவர் மத இயக்கத்தின் அடையாளம் என்று சீன அரசு கருதியது. இவர் ஒரு பிரிவினைவாதி, திபெத்திய தன்னாட்சியை ஊக்குவிப்பவர், திபெத்திய புரட்சியைத் தூண்டுகிறார் என்றெல்லாம் சீன அரசு இவரைக் குற்றம் சாட்டியுள்ளது.

திபெத்தை சீனா ஆக்ரமித்த பின்னர், திபெத்தை தனி நாடாக்க தலாய் லாமா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். மனித சமுதாயத்திற்குப் பலன்தரும் வகையில் தனது வாழ்வை அர்ப்பணித்து வருகிறார். கருணை மற்றும் அமைதிச் செய்திகளை உலகெங்கும் பரப்பி வருகிறார். 2011ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி, இவர் திபெத்தைவிட்டு வெளியேறிய 52வது ஆண்டு நிறைவின்போது திபெத் அரசியல் தலைவர் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். சீன அரசு இதை ஒரு தந்திரம் என்று கூறுவதாக ஊடகங்கள் கூறுகின்றன.  

எப்பொழுதெல்லாம் இயலுமோ அப்பொழுதெல்லாம் அன்பு காட்டுங்கள் என்று சொன்னவர் 14வது தலாய் லாமா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.