2015-07-13 15:56:00

திருத்தந்தையின் 9வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயண நிறைவு


ஜூலை,13,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஈக்குவதோர், பொலிவியா பரகுவாய் ஆகிய மூன்று இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான ஒன்பது நாள் திருத்தூதப் பயணத்தை நிறைவு செய்து, இத்திங்கள் பிற்பகல் 1.30 மணிக்கு A330 ஆல் இத்தாலியா விமானத்தில் உரோம் வந்து சேர்ந்தார். அப்போது இந்திய இலங்கை நேரம் இத்திங்கள் மாலை 5.00 மணியாகும். உரோம் சம்ப்பினோ விமான நிலையத்திலிருந்து வத்திக்கானுக்குத் திரும்பிய வழியில், உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று, வெண்மையும் மஞ்சளும் நிறைந்த பெரிய மலர்க்கொத்தை அன்னை மரியாவுக்கு அர்ப்பணித்து நன்றி தெரிவித்தார் திருத்தந்தை. வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னரும், அவற்றை நிறைவு செய்த பின்னரும் மேரி மேஜர் பசிலிக்கா சென்று அன்னை மரியாவுக்கு நன்றி தெரிவிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். அசுன்சியோன் நகரிலிருந்து உரோமைக்கு வந்த 13 மணி நேரம் கொண்ட நீண்ட நேர இவ்விமானப் பயணத்தில் வழியில் கடந்துவந்த, பரகுவாய் பொலிவியா, பிரேசில், கேப் வெர்த், மொராக்கோ, இஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களுக்குச் செபமும் வாழ்த்தும் நிறைந்த தந்திச் செய்திகளையும் அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்தாலிய அரசுத்தலைவர் ஜெர்ஜோ மத்தரெல்லா அவர்கள் அனுப்பிய நன்றிச் செய்தியில், திருத்தந்தையின் நம்பிக்கை செய்தி அனைத்து மக்களும் உறுதியான விசுவாசத்தில் வேரூன்ற உதவுவதாக உள்ளது என்று கூறியுள்ளார். இவ்விமானப் பயணத்தில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

இலத்தீன் அமெரிக்காவில் இந்த மூன்று, சிறிய மற்றும் ஏழை நாடுகளில் இலட்சக்கணக்கான மக்களைச் சந்தித்து அவர்களை விசுவாசத்தில் ஆழப்படுத்தினார் திருத்தந்தை. பூர்வீக இன மக்களின் உரிமைகளுக்காகவும், ஏழைகளின் நலன் உயரவும் குரல் கொடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.