2015-07-13 16:13:00

திருத்தந்தை பரகுவாய் இளையோரிடம்- வாழ்வை வீணாக்காதீர்கள்


ஜூலை,13,2015. இக்கால எதிர்மறைக் கலாச்சாரத் தாக்கத்திற்கு எதிராகச் சென்று சுதந்திரமான இதயத்துடன் இயேசுவுக்காக வாழுங்கள். தங்கள் வாழ்வை வீணடிக்கும் இளையோர் நமக்குத் தேவையில்லை. நம்பிக்கையோடு வாழும் இளையோர் நமக்குத் தேவைப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் இயேசுவை அறிந்துள்ளனர் மற்றும் சுதந்திரமான இதயத்தைக் கொண்டிருக்கின்றனர். சுதந்திரம் என்பது, இறைவன் நமக்கு இலவசமாக வழங்கும் கொடை. ஆனால், அதை எப்படி பெறுவது என்பதை அறிந்திருக்க வேண்டும். நாம் விடுதலையடைந்த ஓர் இதயத்தைக் கொண்டிருக்க வேண்டும். போதைப்பொருளுக்கு அடிமையாதல், சோகம் ஆகியவை நம் சுதந்திரத்தை நம்மிலிருந்து அகற்றிவிடும். நம் இதயத்தை நிறைக்கக்கூடிய உண்மையான மகிழ்ச்சி, விதவிதமாய் ஆடை அணிவதிலோ, புகழ்பெற்ற நிறுவனங்கள் தயாரித்த விலையுயர்ந்த காலணிகளை வைத்திருப்பதிலோ அல்லது புதுப்புது வடிவங்களில் நகைகளால் உடலை அலங்கரிப்பதிலோ இல்லை, மாறாக, உண்மையான மகிழ்ச்சி, பிறரை நம் அருகில் ஈர்ப்பதில், அழுவாரோடு அழுவதில், சோர்வடைந்து துன்பத்தில் இருப்பவர்க்கு ஆறுதலாக அருகில் இருப்பதில், பிறர் கண்ணீர் சிந்துவதற்கு நம் தோள்களை அளிப்பதில், அவர்களை அன்போடு அணைத்து முத்தமிடுவதில் உள்ளது. கண்ணீர் சிந்துபவரோடு சேர்ந்து கண்ணீர் சிந்தத் தெரியவில்லையென்றால், பிறரோடு சேர்ந்து எப்படி மகிழ்வது என்றுகூடத் தெரியாமல் இருந்தால் வாழ்வது எப்படி என்பதை நாம் அறியாமல் இருக்கிறோம் .

இவ்வாறு கூறிய திருத்தந்தை இதய மாற்றத்திற்காக இளையோருடன் சேர்ந்து செபித்தார். இயேசுவே, இவ்வுலகில் எத்தீமைக்கும் அடிமையாகாதபடிக்கு விடுதலை அடைந்த ஓர் இதயத்தை அருளும். வசதியான வாழ்வுக்கும், தீய பழக்கங்களுக்கும், போலியான விடுதலைக்கும், நாங்கள் விரும்புவதையெல்லாம் விரும்பும் இடத்தில் எல்லாம் செய்வதற்கு அடிமையாகும் வாழ்வை அல்ல, உண்மையான விடுதலை அடைந்த இதயத்தை அருளும் எனச் செபித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.