2015-07-13 16:26:00

திருத்தந்தை - பரகுவாய் நாட்டில் இளையோர் சந்திப்பு


ஜூலை,13,2015. இஞ்ஞாயிறு மாலை 5 மணியளவில் பரகுவாய் நதிக்கரையின் முன்பக்கம் அமைந்துள்ள “costanera”வுக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு இலட்சக்கணக்கான இளையோர் ஆடல் பாடல்களுடன் கூடியிருந்தனர். லிஸ் எந்ற இளம்பெண், தனது தாயைப் பராமரித்து வருவது குறித்து சாட்சியம் சொன்னார். மற்றோர் இளைஞரும் சாட்சியம் சொன்னார். இவர்களின் கேள்விகளுக்கும் சாட்சியங்களுக்கும் பதில் அளிப்பதாக திருத்தந்தையின் உரை அமைந்திருந்தது. உங்களுக்கென உரை ஒன்று தயாரித்து வைத்திருந்தேன். இப்படிப்பட்ட உரைகளைக் கேட்பதற்குச் சலிப்பு தட்டும். எனவே அதை வழங்காமல் உங்களோடு பேசுகிறேன் என்றவுடன் இளையோர் ஓங்கி கைதட்டி ஆரவாரித்தனர். திருத்தந்தையும் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். இளையோர் தங்களின் வாழ்வை வீணாக்க வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார். பின்னர், இளையோரை ஆசிர்வதித்து அங்கிருந்து அசுன்சியோன் விமான நிலையம் சென்றார் திருத்தந்தை. அங்கு பரகுவாய் அரசுத்தலைவர் மற்றும் பலரும் வழியனுப்பக் கூடியிருந்தனர். சிறாரின் பாடல்களும் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அனைவருக்கும் நன்றி சொல்லி, உரோமைக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் திருத்தந்தையின் இலத்தீன் அமெரிக்காவுக்கான 2வது  திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.