2015-07-13 16:15:00

Ñu Guazú பூங்காவில் திருத்தந்தை திருப்பலி


ஜூலை,13,2015. அசுன்சியோன் நகரின் Banado Norte சேரி மக்களைச் சந்தித்த பின்னர், அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில், அந்நகரின் புறநகர் பகுதியில் இருக்கின்ற Ñu Guazú பூங்காவுக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். 1988ம் ஆண்டு மே 16 முதல் 18 வரை புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், பரகுவாய் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது அந்நாட்டின் ரோக் கொன்சாலஸ் தெ சாந்தா குரூஸ் மற்றும் அவரின் தோழர்களை, புனிதர்களாக அறிவித்தார். பரகுவாய் நாட்டின் முதல் புனிதர்களான இவர்கள் அறிவிக்கப்பட்ட அதே இடத்தில் Ñu Guazú திருத்தலம் கட்டப்பட்டுள்ளது. 15 இலட்சம் பேர் அமரக்கூடிய இத்திருத்தல வளாகம் இராணுவத் தளத்திற்கருகில் உள்ளது. இவ்விடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருத்தூதுப் பயணத்தின் இறுதி திருப்பலியை நிறைவேற்றினார். பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட விசுவாசிகள் கலந்து கொண்ட இத்திருப்பலியில் அர்ஜென்டீனா அரசுத்தலைவர் Cristina Fernandez de Kirchner, புவனோஸ் ஐரெஸ் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைத் தலைவர் Tarasios போன்றோர் உட்பட பல்லாயிரக்கணக்கான அர்ஜென்டீனா மக்களும் கலந்துகொண்டனர். திருத்தந்தையின் தாய் நாடான அர்ஜென்டீனா பரகுவாய் நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.

முன்னோக்கிச் செல்லுங்கள், சாத்தான் உங்களைப் பிரித்துவிடாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்லி திருப்பலியை ஆரம்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். விசுவசிக்க வேண்டுமென்று கிறிஸ்தவர்கள் எவரையும் கட்டாயப்படுத்த முடியாது. அதேநேரம், பிறரோடு ஒருமைப்பாட்டுணர்வில் வாழ்வதையும், பிறரை அன்புகூர்வதையும், பிறரை வரவேற்பதையும் கிறிஸ்தவர்கள் நிறுத்த வேண்டுமென்று யாரும் அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும் கூறினார் திருத்தந்தை. இத்திருப்பலியில், Guarani பூர்வீக இனமொழியில் எல்லாரோடும் சேர்ந்து வானகத் தந்தையை நோக்கிச் செபித்தார் திருத்தந்தை. 16ம் நூற்றாண்டில் இஸ்பானியர்கள் இந்நாட்டில் குடியேறி காலனி ஆதிக்கத்தைத் தொடங்குவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்நரே Guarani பூர்வீக இனம் இந்நாட்டில் வாழ்ந்து வந்தது. தற்போது பரகுவாயில் இஸ்பானிய மொழியோடு, Guarani மொழியும் அரசு மொழியாக உள்ளது. Ñu Guazú பூங்காவில் 131 அடி நீளம் மற்றும் ஏறக்குறைய 56 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த திருப்பலி மேடை 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட சோளக்கூம்புகள், பிழிந்து சாறு எடுக்கப்பட்ட 20 ஆயிரம் கூளங்கள், 2 இலட்சம் குவாரானித் தேங்காய்கள் ஆகியவற்றால் Koki Ruiz என்ற கலைஞரால் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இயேசு சபையினர் பரகுவாய் நாட்டில் மறைப்பணியாற்றியதைப் போற்றும் விதமாக, திருப்பலி மேடையின் நடுவில் இயேசு சபையினரின் IHS அடையாளமும், ஒரு பக்கத்தில் புனித இலொயோலா இஞ்ஞாசியார், மறுபக்கத்தில் புனித பிரான்சிஸ் அசிசியார் படங்களும் வைக்கப்பட்டிருந்தன. இம்மேடை பிரமிடு வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இத்தேங்காய்கள் சோப் தயாரிப்பதற்கும், சோளத்தட்டைகள் விலங்குகளுக்கு உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

Ñu Guazú பூங்காவில் திருப்பலி நிறைவேற்றிய பின்னர், அதில் கலந்துகொண்ட அர்ஜென்டீனா அரசுத்தலைவர் கிறிஸ்டினா மற்றும் புவனோஸ் ஐரெஸ் கிரேக்க ஆர்த்தாடக்ஸ் தலைவரையும் வாழ்த்தினார். திருப்பலிக்குப் பின்னர் அன்னைமரியிடம் செபித்து, பரகுவாய் மக்களின் அன்னை மரியா பக்தியைப் புகழ்ந்து, பரகுவாய் நாட்டை அர்ப்பணித்தார். பரகுவாயில் திருத்தந்தை எவ்வளவு தூரம் அன்புகூரப்படுகிறார் என்பதை அறிகிறேன், உங்களுக்காகச் செபிக்கிறேன், இப்பொழுது மூவேளை செபத்தைச் செபிப்போம் என்று கூறிச் செபித்தார் திருத்தந்தை. அனைவருக்கும் ஆசிர் அளித்து திருப்பீடத் தூதரகம் சென்று ஆயர்களைச் சந்தித்தார். அவர்களோடு மதிய உணவு அருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.