2015-07-12 15:26:00

வருங்காலத்தை உருவாக்குமாறு பரகுவாய்ப் பெண்களுக்கு அழைப்பு


ஜூலை,12,2015. திருப்பயணிகள், அன்னைமரியா திருத்தலங்களுக்குச் செல்வது, மரியிடம் தங்கள் தேவைகளை முன்வைத்து, பெற்ற கொடைகளுக்கு நன்றி செலுத்தி, தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டி, மீண்டும் வாழ்வைத் தொடங்குவதற்காகவே. எத்தனை திருமுழுக்குகள், இறையழைத்தல்கள், திருமணங்கள் மரியின் பாதத்தில் நடக்கின்றன. அன்று, புனித கன்னி மரியாவிடம், வானதூதர் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் என்று சொல்லி இயேசுவின் பிறப்பை அறிவித்தபோது, முதலில் மரியா கலங்கினார். பின்னர் இறைவனின் விருப்பத்திற்கு ஆகட்டும் என்று பதில் சொன்னார். அதற்குப் பின்னர் இறைவனின் பிறப்பு, எகிப்துக்கு குழந்தை இயேசுவைத் தூக்கிக் கொண்டு சென்றது, சிலுவையில் இயேசுவின் மரணம் போன்ற நிகழ்வுகளில் அன்னை மரியா இன்னல்களை எதிர்கொண்டார். அருள்மிகப் பெற்றவரே, அகமகிழ், ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் என்று அன்னை மரியாவுக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகளை, பரகுவாய்ப் பெண்களும் வாழ்வதற்கு அழைப்பு விடுக்கப்படுகின்றனர். பரகுவாய் மக்களும், விசுவாசிகளாக, சோதனைகள் மற்றும் போராட்டங்களால் புடமிடப்பட்டார்கள். இவர்கள், இந்த நினைவுகளையும், தங்களின் தொடக்கங்களையும் நினைவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுக்கப்படுகின்றனர். போரினால் அழிக்கப்பட்ட, தோல்வியைத் தழுவிய மற்றும் சேதமடைந்த நாட்டை மேலே கொண்டுவருவதற்கு, இந்நாட்டுப் பெண்கள், மனைவிகளாக, தாய்மார்களாக, கைம்பெண்களாக பெரும் தியாகத்தைச் செய்துள்ளனர். எனவே இப்பெண்கள், பரகுவாய் நாட்டின் விசுவாசத்தையும் மரபையும் உயிரூட்டம் பெறச்செய்யும் கடமையைக் கொண்டுள்ளனர். உங்களின் உறுதிப்பாட்டை இறைவன் ஆசிர்வதிப்பாராக. விசுவாசத்தின் பெண்ணான, திருஅவையின் தாயாகிய அன்னைமரியாவின் வாழ்வு, கடவுள் நம்மை எந்த நேரத்திலும் கைவிடமாட்டார் என்று உறுதியை வழங்குகிறது. காக்குப்பே அன்னைமரியா உங்கள் அனைவரையும் பாதுகாப்பாராக என்று தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.