2015-07-12 14:33:00

பரகுவாய் நாட்டில் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம்


ஜூலை,12,2015. பரகுவாய் நாடு, தென் அமெரிக்காவின் மத்தியில் அமைந்துள்ள ஒரு குடியரசாகும். வடகிழக்கில் பிரேசிலும், தெற்கிலும் தென்மேற்கிலும் அர்ஜென்டினாவும், வடமேற்கில் பொலிவியாவும் எல்லை நாடுகளாக அமைந்துள்ளன. 1516ம் ஆண்டில் இஸ்பானிய நாடுகாண் பயணிகள், பரகுவாய் நாட்டுப் பகுதிக்கு முதன் முதலில் சென்றனர். இந்நாடு, 1811ம் ஆண்டில் இஸ்பானிய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்தது. இருபதாம் நூற்றாண்டில், சர்வாதிகார ஆட்சிகளைத் தொடர்ந்து எதிர்கொண்ட பரகுவாய் நாடு, 1993ம் ஆண்டில் பலகட்சித் தேர்தல்களை முதன்முறையாக நடத்தியது. தற்போது முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இக்குடியரசில், இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 8 மணிக்குத் திருத்தூதுப் பயண நிகழ்வுகளைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது இந்திய இலங்கை நேரம் இஞ்ஞாயிறு மாலை 5.30 மணியாகும். இந்நாளின் முதல் நிகழ்வாக, பரகுவாய் தலைநகர் அசுன்சியோன் நகர் Banado Norte சேரிப் பகுதிக்குச் சென்று அங்கு வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து, உலகின் ஏழைகளுக்காகக் குரல் கொடுத்து, அம்மக்களை ஆசீர்வதித்தார் திருத்தந்தை. இச்சேரிக்கு அருகிலுள்ள பரகுவாய் ஆறு பெருக்கெடுத்தால் இப்பகுதி, சகதியும் தண்ணீரும் நிறைந்து மக்கள் நடமாடுவதற்கே இயலாத இடமாக இருக்குமாம். மழையில்லாத இக்காலத்தில்கூட அப்பகுதி சகதியாக இருப்பதாக எம் நிருபர்கள் கூறினர். பரகுவாய் நாட்டுக்கான திருத்தந்தையின் இஞ்ஞாயிறு திருத்தூதுப் பயணத் திட்டத்தில் அசுன்சியோன் நகரில் திருப்பலி, ஆயர்கள் சந்திப்பு, இளையோர் சந்திப்பு ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வுகளை நிறைவு செய்து இஞ்ஞாயிறு மாலை 7 மணிக்குப் புறப்பட்டு, இத்திங்கள் பிற்பகல் 1.45 மணிக்கு உரோம் வந்தடைவார் திருத்தந்தை. இத்துடன் ஈக்குவதோர், பொலிவியா, பரகுவாய் ஆகிய மூன்று இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணம் நிறைவுபெறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.