2015-07-12 15:18:00

திருத்தந்தை-சிறார் வயதுவந்தோர்க்கு எடுத்துக்காட்டு


ஜூலை12,2015. அன்புச் சிறாரே, நீங்கள் அனைவரும் அறிவில் சிறந்தவர்கள் என்று சொல்கிறார்கள். எனவே உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இயேசு எப்பொழுதாவது எரிச்சல் அடைந்தாரா? சிறுபிள்ளைகள் இயேசுவிடம் வருவதை திருத்தூதர்கள் தடுப்பதற்கு முயற்சித்தபோது மட்டும் இயேசு எரிச்சல் அடைந்தார் என்று நற்செய்தி கூறுகிறது. நீங்கள் அவ்வப்பொழுது எரிச்சல் அடைகிறீர்களா? ஆனால், இயேசு அச்சமயத்தில் உண்மையிலேயே எரிச்சல் அடைந்தார். ஏனெனில் அவர் சிறுபிள்ளைகள்மீது அன்பு செலுத்தினார். இதனால் இயேசு வயது வந்தவர்களை அன்பு கூரவில்லை என்று அர்த்தமல்ல, ஆனால் இயேசு    சிறுபிள்ளைகளோடு இருப்பதில் மிகவும் மகிழ்ந்தார். மேலும், சிறார், பிறருக்கு எடுத்துக்காட்டாய் இருக்குமாறு கிறிஸ்து விரும்பினார். நீங்கள் சிறுபிள்ளைகள் போல் மாறாவிட்டால் விண்ணரசில் ஒருபோதும் நுழைய மாட்டீர்கள் என்று, கிறிஸ்து தம் திருத்தூதர்களிடம் கூறினார். சிறுபிள்ளைகள் தொடர்ந்து இயேசுவிடம் வந்து கொண்டிருந்தனர். அதேநேரம் திருத்தூதர்கள் அவர்களைத் தடுப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இயேசு சிறுபிள்ளைகளை வரவழைத்து அவர்களைத் தழுவி மற்றவர் முன்னால் நிறுத்தினார். அதன்மூலம் மக்கள் சிறுபிள்ளைகள் போல் வாழ்வதற்குக் கற்றுக்கொள்வார்கள். கிறிஸ்து இதே செய்தியை இன்று நமக்கும் வைத்திருக்கிறார். சிறுபிள்ளைகளே, உங்களிடமிருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களின் நம்பிக்கையை, உங்களின் மகிழ்வை, உங்களின் கனிவை, நோய்களை எதிர்த்துப் போராடும் உங்களின் திறமையை, உங்கள் பலத்தை, குறிப்பிடத்தக்க உங்களின் மனஉறுதியை நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களைப் பார்ப்பது எங்களுக்குச் சக்தியைக் கொடுக்கிறது. நம்புவதற்கும், தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதற்கும், துணிச்சலை அளிக்கின்றது.

இவ்வாறு “Niños de Acosta Ñu” சிறார் மருத்துவமனையில் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.