2015-07-12 15:11:00

சான் ஹோசே பள்ளி அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூலை,12,2015. அசுன்சியோன் சான் ஹோசே பள்ளி அரங்கத்தில் பரகுவாய் நாட்டு பள்ளி மாணவர்கள், விளையாட்டு, ஊடகத் துறைகளின் பிரதிநிதிகள், பெண்கள் கழகத்தினர், கலைஞர்கள், தொழிற்சாலை உறுப்பினர்கள், அரசுத் தலைவர்கள், வேளாண் துறை பிரதிநிதிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் ஆனந்த ஆரவாரத்துடன் அமர்ந்திருந்தனர். இந்நிகழ்வில் முதலில், பரகுவாய் இராணுவ ஆன்மீகத் தலைவர் ஆயர் Adalberto Martinez Flores அவர்கள், ஒலிவாங்கியின் முன்னர் வந்து, திருத்தந்தையே, இந்த அளவு சுனாமி மகிழ்வைக் கொண்டு வந்ததற்கு நன்றி என்று சொல்லிப் பேசத் தொடங்கியதும், அத்தனை ஆரவாரமும் அமைதியாகி உரையைக் கேட்பதற்கு கூட்டத்தினர் தயாராயினர். இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் ஓர் இளைஞர், ஒரு பூர்வீக இன மனிதர், ஒரு விவசாயப் பெண், ஒரு வர்த்தகப் பெண், அந்நாட்டின் வளர்ச்சித்திட்ட அமைச்சர் ஆகியோர் திருத்தந்தையிடம் கேள்விகளை முன்வைத்தனர். பின்னர் பேசத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஆரவாரத்திற்கு நன்றி என்று சிரித்துக்கொண்டே சொல்லி அக்கேள்விகளுக்குப் பதில் சொன்னார். குறிப்பாக இளையோருக்குத் தனது எண்ணங்களை எடுத்துரைத்தார். 

இச்சந்திப்பை முடித்து, அசுன்சியோன் பேராலயம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு, அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், குருத்துவமாணவர்கள் மற்றும் கத்தோலிக்க இயக்கப் பிரதிநிதிகளுடன் மாலை திருப்புகழ் மாலை செபத்தில் கலந்து கொண்டார் திருத்தந்தை. இவர்களிடம், கிறிஸ்தவ அழைப்பின் இயல்பு குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார். 

கிறிஸ்துவோடு ஒன்றிணைந்து வாழுமாறும், செபப் பற்றையும், பிறரன்புப் பணிகளையும் வளர்க்குமாறும் ஊக்கப்படுத்திய திருத்தந்தை அங்கிருந்து அசுன்சியோன் திருப்பீடத் தூதரகம் சென்றார். அப்போது சனிக்கிழமை இரவு 7.30 மணியாகும். இந்திய நேரம் இஞ்ஞாயிறு காலை 5 மணியாகும். இத்துடன் இச்சனிக்கிழமை நிகழ்வுகள் நிறைவடைந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.