2015-07-12 15:07:00

Caacupé அன்னை மரியா திருத்தல வளாகத்தில் திருப்பலி


ஜூலை,12,2015. பரகுவாய் நாட்டில் அமல அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள Caacupé அற்புத அன்னை மரியா திருத்தல வளாகத்தில் அமர்ந்திருந்த இலட்சக்கணக்கான விசுவாசிகள் மத்தியில் திறந்த காரில் வலம்வந்தார் திருத்தந்தை. இந்நாட்டின் முக்கியமான இத்திருத்தலம், திருத்தந்தைக்கு மிகவும் விருப்பமான திருத்தலம். 1988ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி, இவ்விடத்தில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் பயன்படுத்திய திறந்த காரையே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் பயன்படுத்தினார். இவ்விடத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியின் மறையுரையில், பரகுவாய் நாட்டுப் பெண்கள் அந்நாட்டின் வருங்காலத்தைக் கட்டியெழுப்புவதில் முக்கிய அங்கம் வகிக்கிறார்கள் என்று கூறி, இப்பணியில் பெண்களை ஊக்கப்படுத்தினார். 1864ம் ஆண்டு முதல் 1870ம் ஆண்டு வரை இடம்பெற்ற பரகுவாய்ச் சண்டைக்குப் பின்னர் சமூதாயத்தைக் கட்டியெழுப்பியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் பெண்கள். இச்சண்டையில் அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 முதல் 70 விழுக்காட்டினர் இறந்தனர். இறந்தவர்களில் 70 முதல் 90 விழுக்காட்டினர் ஆண்கள். அதனால் அந்நாட்டில் நான்கு பெண்களுக்கு ஓர் ஆண் என்ற விகித நிலை ஏற்பட்டது.

இத்திருப்பலியின் இறுதியில் பரகுவாய் நாட்டை அமல அன்னைக்கு அர்ப்பணித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் எல்லாருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரை வழங்கினார். இந்நாடுகளில் திருத்தந்தை திருப்பலிகளை நிறைவேற்றியபோது, மரத்தாலான செங்கோலையே பயன்படுத்தினார். இதனை 2014ம் ஆண்டு குருத்து ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத் திருப்பலியில் முதலில் பயன்படுத்தினார். இது இத்தாலியில் சன் ரேமோ சிறைக் கைதிகளால் தயாரிக்கப்பட்டது. புனிதபூமித் திருத்தூதுப் பயணத்தின்போது இது உடைந்துவிட்டது. எனினும் இதே போன்று பெத்லகேமில் ஒலிவமரத்தில் தயாரிக்கப்பட்டது. இந்தச் செங்கோலே திருத்தந்தை இத்திருத்தூதுப் பயணத்தில் பயன்படுத்தி வருகிறார். Caacupé அன்னை மரியா திருவுருவப் படத்தைத் தொட்டுச் செபித்தார் திருத்தந்தை.  இத்திருத்தல வளாகத்தில் நிறைவேற்றிய இத்திருப்பலிக்குப் பின்னர் அங்கிருந்து 53 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற அசுன்சியோன் நகர் திருப்பீடத் தூதரகம் சென்று மதிய உணவருந்தி ஓய்வெடுத்தார். மாலையில் அந்நகரின் சான் ஹோசே பள்ளிக்குச் செல்லும் வழியில், புனித இரஃபேல் மையத்திற்குச் சென்றார். இது பயணத்திட்டத்தில் குறிக்கப்படாத நிகழ்வாகும். அங்கு எய்டஸ், புற்றுநோய் மற்றும் இறக்கும் நிலையில் உள்ள ஏறக்குறைய நூறு நோயாளிகள் பராமரிக்கப்படுகின்றனர். இவ்விடம் அண்மையில், பரகுவாய் நாட்டின் முக்கிய ஓரினச் சேர்க்கையாளர் ஒருவரின் கடும் சொற்களால் தாக்கப்பட்டது. இந்த நோயாளர் மையத்திற்குச் சென்று படுத்த படுக்கையாய் இருக்கும் நோயாளிகளைக் குனிந்து முத்தமிட்டார் திருத்தந்தை. மனதைத் தொட்ட  ஒரு நிகழ்வு என்று இம்மைய இயக்குனர் அருள்பணி Antonio Trentto கூறியுள்ளார். பின்னர் இம்மையத்திலிருந்து சான் ஹோசே பள்ளி அரங்கம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.