2015-07-11 16:22:00

பரகுவாய் விமான நிலையத்தில் திருத்தந்தைக்கு வரவேற்பு


ஜூலை,11,2015. பொலிவியா நாட்டின் சாந்தா குரூஸ் நகரிலிருந்து இரண்டு மணி நேரம் விமானப் பயணம் செய்து பரகுவாய் தலைநகர் அசுன்சியோன் நகரை திருத்தந்தை அடைந்தபோது உள்ளூர் நேரம் இவ்வெள்ளி மாலை மூன்று மணியாகும். பரகுவாய் விமான நிலையத்தில் பரகுவாய் அரசுத்தலைவர் Horacio Cartes அவர்கள் அருகில் அமர்ந்து வரவேற்பு நிகழ்வுகளை இரசித்தார் திருத்தந்தை. சிறுமிகள் இசைக்குழு ஒன்று, இஸ்பானிய மற்றும் Guarani, Ache பூர்வீக இன மொழிகளில் பாடியது. ரோஜா மலர் வண்ணத்தில் சிறுமிகள் உடையணிந்து, தலையில் அதே நிறத்தில் நிறைய மலர்களைச் சூடிக்கொண்டு, கரகாட்டம் போன்று தலையில் சிறிய பானைகளை வைத்துக் கொண்டு அழகாக நடனமாடினர். புன்முறுவலுடன் இதனை இரசித்த திருத்தந்தை எழுந்து நின்றபோது அச்சிறுமிகளில் சிலர் ஓடிவந்து திருத்தந்தையைக் கட்டித் தழுவினர். அவர்களை அரவணைத்து ஆசீர் வழங்கினார் திருத்தந்தை. எண்ணற்ற மக்கள் பல வண்ண மரபு உடைகளில் இருந்தனர். பவனிகளில் அலங்கரித்து தூக்கிச் செல்லப்படும் இயேசுவின் திருஇதயம், அன்னைமரியா திருவுருவம் போன்றெல்லாம் மக்கள் உடுத்திக்கொண்டு இருந்தனர். திருத்தந்தையின் இப்பயணத்தையொட்டி, இவ்வெள்ளி, சனி தினங்களை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது பரகுவாய் அரசு.   

விமான நிலையத்திலிருந்து அசுன்சியோன் திருப்பீடத் தூதரகம் செல்லும் வழியில் இருந்த, நல்ல ஆயர் பெண்கள் சிறையைப் பார்வையிட்டார் திருத்தந்தை. இது பயணத் திட்டத்தில் குறிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு, 50 கைதிகள், திருத்தந்தைக்கென தயார் செய்திருந்த பாடலைப் பாடினர். இச்சிறையில் 500 பெண் கைதிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் போதைப்பொருள் குற்றம் தொடர்பாக இருப்பவர்கள். அசுன்சியோன் திருப்பீடத் தூதரகம் சென்ற திருத்தந்தை, சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் அரசுத்தலைவர் மாளிகை சென்றார். அங்கு அரசுத்தலைவர் Horacio Cartes அவர்களுடன் தனியே பேசிய பின்னர், திருஅவை அன்னமரியா அழகிய வண்ணப் படத்தைப் பரிசாக அளித்தார் திருத்தந்தை. அரசுத்தலைவரும், அப்பகுதியில் நெய்யப்பட்ட வெண் கம்பளியால் ஆன மேலாடை மற்றும் கால்பந்து விளையாட்டு வீரர் சட்டையில் ``Papa Francisco''  என்று எழுதப்பட்ட சட்டை ஒன்றையும் பரிசாக அளித்தார். பின்னர் அம்மாளிகையில், பரகுவாய் அரசு, தூதரக அதிகாரிகளுக்கு உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது இந்திய இலங்கை நேரம் இச்சனிக்கிழமை காலை 4.15 மணியாகும்.

Caacupé அன்னையின் முக்காட்டில் உள்ள pasiflora மலரால் அடையாளம் காட்டப்படும் இந்நாடு வளம் பெறட்டும் என்று வாழ்த்தினார். பின்னர் அங்கு அமர்ந்திருந்த கூட்டத்தில் சிலரைத் தனிப்பட்டு வாழ்த்தினார்.

இந்நிகழ்வை நிறைவு செய்து அசுன்சியோன் திருப்பீடத் தூதரகம் சென்று இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். பரகுவாய் மக்கள் திருத்தந்தையின் இப்பயணத்தில், தங்கள் நாட்டிலும், சமூகத்திலும் புதுப்பித்தல் மற்றும் மாற்றத்தையே எதிர்பார்ப்பதாக, வத்திக்கான் வானொலி நிருபர்கள் கூறியுள்ளனர். இம்மக்கள் தாழ்மைப் பண்புடையவர்கள், நேரிடையாகப் பேசுபவர்கள், தங்களின் வளமையான கலாச்சார மரபிலும், நாட்டின் அழகிய இயற்கை வளங்களிலும் போர் மற்றும் தவறான பயன்பாட்டை மேற்கொண்டதையும் பற்றிப் பெருமைப்படுபவர்கள். எனினும், நாட்டில் பரவலாகக் காணப்படும் அரசியல் ஊழல், அழிக்கப்பட்டு வரும் காடுகள், பல்வகை உயிரின அழிவு, நிலமும் நீரும் மாசுபடுதல் போன்றவை வருங்காலத் தலைமுறையின் கவலைகளாக உள்ளன. இம்மக்களின் நல் ஆசைகள் நிறைவேற திருத்தந்தையின் இப்பயணம் உதவட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.