2015-07-11 15:56:00

திருத்தந்தை - எனது பாவங்களிலிருந்து மீட்கப்பட்ட மனிதர் நான்


ஜூலை,11,2015. நான் உங்களைப் பார்த்து, கிறிஸ்துவின் சிலுவையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அன்பின் கனியான விசுவாசம் மற்றும் நம்பிக்கையை உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் இந்நாட்டை விட்டுச் செல்வதற்கு என்னால் இயலவில்லை. “நம் முன்னால் நிற்கும் இந்த மனிதர் யார்?” என்று நீங்களே உங்களைக் கேட்டுக்கொள்ளக்கூடும். இக்கேள்விக்கு, முற்றிலும் எனது சொந்த வாழ்விலிருந்து ஒன்றைப் பதிலாகச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் முன்னால் நிற்கும் இந்த மனிதர் மன்னிப்பை அனுபவித்தவர். தனது பழைய பாவங்கள் பலவற்றிலிருந்து மீட்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு மனிதர் இவர். இதுதான் நான். உங்களுக்குக் கொடுப்பதற்கு இதைவிட அதிகமாக  என்னிடம் கிடையாது. ஆயினும், என்னிடம் இருப்பதையும், நான் அன்புகூருவதையும்  உங்களுக்கு நான் அளிக்க விரும்புகிறேன். அதுவே இயேசு கிறிஸ்து, வானகத் தந்தையின் கருணை. இயேசுவின் அன்பு உண்மையானது, மற்றும், தாம் அன்புகூருபவர்களின் நெருக்கடிகளை மிகுந்த கரிசனையுடன் நோக்குகிறது. இந்த அன்பு, குணப்படுத்துகிறது, மன்னிக்கிறது, மேலே உயர்த்துகிறது மற்றும் அக்கறை காட்டுகிறது. ஒருவர் அதனை பலவழிகளில் இழந்தாலும் அந்த மாண்பை நிலைநிறுத்துகிறது. இதில் இயேசு பிடிவாதமாக உள்ளார். நாம் இழந்த மாண்பை நிலநாட்ட அவர் தனது வாழ்வையே வழங்கினார். இதைப் புரிந்துகொள்வதற்கு, கைதிகளாக இருந்த திருத்தூதர்கள் பேதுருவையும் பவுலையும் நாம் நோக்கலாம். அவர்களும் சிறையில் தங்களின் சுதந்திரத்தை இழந்திருந்தனர். ஆனால், அவர்களை மனச்சோர்வடையாமல் காத்தது செபம். அவர்கள் தனியாகவும், பிறரோடு சேர்ந்தும் செபித்தனர். அவர்கள் ஒருவர் ஒருவருக்காகச் செபித்தனர். இந்த இருவகைச் செபங்களும் வாழ்வையும், நம்பிக்கையையும் காத்துக்கொள்வதற்கு உதவியது. இந்த வலையமைப்பே மனச்சோர்வில் வீழ்ந்து விடாமல் நம்மைக் காக்கின்றது. இது, நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதற்கு ஊக்கப்படுத்துகிறது. இது வாழ்வை, உங்களின் சொந்த வாழ்வை, உங்களின் குடும்பங்களை ஆதரிக்கின்றது. எனவே சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவை உற்று நோக்கித் தியானியுங்கள். அவரின் காயங்களில் ஒருவர், தனது துன்பங்களையும், பாவங்களையும் வைக்கலாம். இயேசு உங்கள் வாழ்வின் ஓர் அங்கமாக மாறும்போது, நாம் நம் கடந்த காலத்தில் சிறையுண்டு இருக்கமாட்டோம். மாறாக, நிகழ்காலத்தை வித்தியாசமாக நோக்கத் தொடங்குவோம். நம்மையும், நம் வாழ்வையும் வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்குவோம்.  சிறைகளில் உங்களைக் காணவரும் அருள்பணியாளர்களிடம் பேசுங்கள்!. நீங்கள் எழுந்திருக்க உதவி செய்வதற்கு இயேசு விரும்புகின்றார். இந்த உறுதிப்பாடானது, நம் மாண்பைக் காத்து கடினமாக உழைப்பதற்கு நமக்கு உதவுகிறது. கொள்ளவைவிட அதிகமான பேர் இருப்பது, நீதி கிடைக்காமை, வன்முறை போன்ற இன்னல்கள் சிறை அமைப்பில் உள்ளன. எல்லா நம்பிக்கையும் விட்டுப்போகவில்லை. இந்தச் சீரமைப்பு மையத்தில் நீங்கள் சேர்ந்து வாழும் முறையானது, ஓரளவுக்கு உங்களைச் சார்ந்துள்ளது. துன்பமும், கையறுநிலையும் நம்மைத் தன்னலவாதிகளாக்கி, முரண்பாடுகளுக்கு இட்டுச்செல்லக்கூடும். ஆனால், இவற்றை, உண்மையான உடன்பிறப்பு உணர்வை உருவாக்குவதற்கான வாய்ப்பாக ஆக்கலாம். ஒருவர் ஒருவருக்கு உதவி செய்யுங்கள். சாத்தான், பகைமை, பிரிவினை மற்றும் கும்பல் குற்றத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கிறான். ஆனால் நீங்களோ, முன்னேற்றத்திற்கான பாதையில் தொடர்ந்து உழையுங்கள். இவ்வாறு பால்மசோலா சிறைக் கைதிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.