2015-07-11 16:17:00

சாந்தா குரூஸ்-பால்மசோலா சிறைக் கைதிகளோடு திருத்தந்தை


ஜூலை,11,2015. இவ்வெள்ளி காலை 9.30 மணிக்கு சாந்தா குரூஸ் நகரிலுள்ள அந்நாட்டின் பெரிய பால்மசோலா சிறைக்குச் சென்று ஏறக்குறைய ஒரு மணி நேரம் செலவிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இம்மையம், பொலிவியாவில் அதிகமான கைதிகளைக் கொண்டுள்ள, மிகவும் பெரிய, மிகவும் ஆபத்தான மற்றும் மிகவும் பிரச்சனைக்குரிய இடங்களில் ஒன்றாகும். இலத்தீன் அமெரிக்காவிலுள்ள மற்ற சிறைகளைப் போலன்றி, இங்கு சிறைக் காவலர்களின் கட்டுப்பாடுகள் குறைவு. சுற்றுப்புறத்தை மட்டுமே இவர்கள் அதிகமாக காவல் செய்கின்றனர். இதனாலே இது "சிறை நகரம்" என அழைக்கப்படுகிறது. முன்னாள் கைதிகளின் கூற்றுப்படி, பால்மசோலா சிறையில் ஏறக்குறைய எல்லாமே கிடைக்கும். ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகம் இங்கு நடக்கின்றது. வெளியில் கிடைப்பதைவிட போதைப்பொருளை இங்கு மலிவாக வாங்கலாம். இச்சிறைக்குள் சில விவகாரங்களைக் கவனிப்பதற்கு கைதிகள் இணைந்து, உள்ஒழுக்கம் என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர். பொலிவியச் சட்டத்தின்படி ஆறு வயதுக்குட்பட்ட சிறார் தங்களின் பெற்றோடு சிறையில் இருக்கலாம். இதை ஐ.நா. நிறுவனம் குறை கூறியுள்ளது. பால்மசோலாவில் உள்ள கைதிகளில் ஐந்தில் நான்கு பேர் விசாரணைக்காகக் காத்திருக்கின்றனர். அமெரிக்கத் தொழிலதிபர் Jacob Ostreicher, 11 மாதங்கள் எவ்வித விசாரணையுமின்றி இச்சிறையில் இருந்துள்ளார். Santa Cruz de la Sierra நகருக்குள் இருந்த இச்சிறையை புறநகர்ப் பகுதிக்கு மாற்றுவதற்கு 1989ம் ஆண்டில் பொலிவியா அரசு தீர்மானித்து இடத்தை மாற்றியது. தற்போது பொலிவியா நாட்டின் மொத்த கைதிகளில் 36 விழுக்காட்டினர் பால்மசோலா சிறையில் வாழ்கின்றனர். உள்கட்டமைப்பு ஒழுங்காக இல்லாததால் கைதிகள் தங்களின் சிறை அறைகளுக்கு கட்டணம் செலுத்தி வாழ்கின்றனர். தனி அறைக்கு மாதம் 300 டாலர். இது மற்ற கைதிகளாலே வசூலிக்கப்படுகின்றது. பணம் கட்ட இயலாதவக்ரள் பிற கைதிகளுடன் அறைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் அல்லது வராந்தாக்களிலும், படிக்கட்டுகளிலும் வாழ வேண்டும். கைதிகளைப் பார்ப்பதற்கு தினமும் அனுமதி உண்டு. பால்மசோலாவில் தற்போது நான்காயிரம் கைதிகள் தங்கள் குடும்பங்களுடன், "பாதுகாக்கப்பட்ட கிராமம்" என்ற சூழலில் வாழ்கின்றனர். அதிகமானவர்கள் போதைப்பொருள் குற்றம் தொடர்பாக இருப்பவர்கள். இச்சிறையைப் பார்ப்பதற்கு மக்கள் தொகை நெருக்கம் நிறைந்த நகரம் போல காட்சியளிக்கும். சிறிய கோல்ப் வண்டிகளில் இதில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வது வசதியாக இருக்கும். பால்மசோலா சிறையில் எதிர் எதிர்க் கும்பல்களுக்கிடையே இடம்பெற்ற கடும் சண்டையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 36 பேர் இறந்தனர். பொலிவியாவில் 32 சிறைகள் உள்ளன. ஆனால் இவற்றில் கொள்ளளவைவிட மூன்று மடங்காக, 51 ஆயிரம் கைதிகள் உள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. இங்குச் சென்ற திருத்தந்தையிடம் பல கைதிகள், தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, இங்கு, வாழும் வசதிகளை மேம்படுத்துமாறு அரசிடம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இங்கு உரையாற்றிய திருத்தந்தை, சிறிது நேரம் அமைதியாகச் செபித்தார். கைதிகளும் தாங்கள் விரும்பியபடி செபிக்குமாறு கூறினார். பின்னர் கைதிகளை ஆசிர்வதித்து தனக்காகச் செபிக்குமாறு கூறினார் திருத்தந்தை. ஏனெனில், நானும் பல தவறுகள் செய்துள்ளேன் மற்றும் நானும் தவம் செய்ய வேண்டும், நன்றி என்றும் கூறினார். அந்தச் சிறைப் பணியாளர்களிடம், நல்லவர், தீயவர் என மக்களைப் பிரித்துப் பார்க்கும் மனநிலையை ஒதுக்கிவிட்டு, பிறருக்கு உதவுவதில் கவனம் செலுத்தக் கேட்டுக்கொண்டார். இப்படிச் செய்வதால், நல்ல நிலைகளை உருவாக்கி கைதிகளுக்கு மாண்பை வழங்க முடியும் என்று கூறினார் திருத்தந்தை. கைதிகள், திருத்தந்தைக்கு, தாங்கள் வரைந்த அவரின் உருவப் படங்கள், தொட்டில் உட்பட பல கைவேலைப்பாடு பொருள்களைப் பரிசாக அளித்தனர். உலகிலே மிகவும் நெருக்கமான சிறையாக நோக்கப்படும் பால்மசோலாவிலிருந்து 14 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சாந்தா குரூஸ் பங்கு ஆலயம் சென்று பொலிவியா நாட்டு ஆயர்களைச் சந்தித்தார் திருத்தந்தை. பின்னர் திறந்த காரில் 17 கிலோ மீட்டர் தூரம் சென்று சாந்தா குரூஸ் Viru Viru பன்னாட்டு விமான நிலையம் சென்றார். அனைவருக்கும் நன்றி சொல்லி பரகுவாய் நாட்டுக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.