2015-07-11 16:07:00

Copacabana அன்னையிடம் கவுரவப் பட்டயங்கள் அர்ப்பணிப்பு


ஜூலை,11,2015. ஜூலை 10, இவ்வெள்ளி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பொலிவியா நாட்டிற்கான திருத்தூதப் பயணத்தின் நிறைவு நாள். இவ்வெள்ளி காலை 7.30 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இவ்வெள்ளி மாலை 5 மணிக்கு, திருத்தந்தை தங்கியிருந்த சாந்தா குரூஸ் நகர் முன்னாள் பேராயர் இல்லத்திலுள்ள சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றினார். பொலிவியா அரசுத்தலைவர் ஈவோ மொராலெஸ் அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்கிய, இரு கவுரவ விருது பட்டயங்களை, பொலிவியா நாட்டின் பாதுகாவலரான Copacabana அன்னை மரியாவுக்கு அர்ப்பணித்து, பொலிவியா நாட்டிற்காகச் செபித்து, அம்மக்களை அன்னைமரியின் தாய்க்குரிய பாதுகாவலில் ஒப்படைத்தார் திருத்தந்தை. அந்த இரு பட்டயங்களையும் அன்னைமரியா பாதத்தில் வைத்து, பொலிவியா மக்களுக்கும், அரசுத்தலைவருக்கும் நன்றி தெரிவித்தார். Copacabana அன்னை மரியா தனது மக்களையும், புனித பேதுருவின் வழிவரும் திருத்தந்தையையும், அகிலத் திருஅவையையும் எப்போதும் நினைவுகூரவும் வேண்டுமென இவற்றை அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார். அன்னையே, உம் பிள்ளைகளாகிய பொலிவியா மக்களிடமிருந்து இந்நாள்களில் நான் பெற்ற பல வேண்டுதல்கள் நிறைவேறவேண்டுமென்ற எனது செபங்களை உம் பாதத்தில் அர்ப்பணித்து, உம்மிடம் கெஞ்சிக் கேட்கிறேன்.

இவ்வாறு Copacabana அன்னை மரியாவிடம் செபித்து அவ்வில்லத்தில் வாழ்பவர்க்கு நன்றி சொல்லி அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Santa Cruz-Palmasola சீர்திருத்த மையத்திற்குச் சென்று அங்கு ஏறக்குறைய ஒரு மணி நேரம் செலவிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.