2015-07-10 15:45:00

பூர்வீகஇனங்களுக்கு எதிரான திருஅவையின் பாவங்களுக்கு மன்னிப்பு


ஜூலை,10,2015. விவசாய நிலங்களை இழந்தோர், வேலை வாய்ப்பற்றோர், ஏழைகள் போன்றோரை உள்ளடக்கிய சமூகத்தின் விளிம்பிலுள்ள மக்களின் சமூக இயக்கங்களின் 1,500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுக்கு திருத்தந்தை ஆற்றிய உரையின் சுருக்கம்...

பழைய மற்றும் புதிய காலனி ஆதிக்க அமைப்பு முறைகளை ஒதுக்கித் தள்ளுவோம், மக்களுக்கும், கலாச்சாரங்களுக்கும் இடையே இடம்பெறும் சந்திப்புக்களை வரவேற்போம். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர். இங்கு உங்கள்முன் ஒரு முக்கியமான விவகாரத்தைக் கொண்டுவர விரும்புகிறேன். காலனி ஆதிக்கம் பற்றி   திருத்தந்தை பேசும்போது, திருஅவையின் சில நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் விடுகிறார் என்று சிலர் கூறலாம். ஆனால் நான் மிகவும் மனவருத்தத்தோடு இதைச் சொல்கிறேன். இறைவனின் பெயரால் அமெரிக்க பூர்வீக இன மக்களுக்கு எதிராக பல கடுமையான குற்றங்கள் இழைக்கப்பட்டன. எனது முந்தைய திருத்தந்தையரும், இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவையும் இந்த மனவருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.  புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் போன்று நானும் இதைச் சொல்ல விரும்புகிறேன். திருஅவை தனது பிள்ளைகளின் கடந்தகால மற்றும் நிகழ்காலப் பாவங்களுக்கு இறைவன் முன்னால் மண்டியிட்டு மன்னிப்பை இறைஞ்சுகின்றது. புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கேட்டது போன்று, நானும் இங்கு இதைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். திருஅவை செய்த தவறுகளுக்காக மட்டுமல்ல, அமெரிக்காவை வென்றதாகச் சொல்லப்படும் காலத்தில், பூர்வீக இன மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்காகவும் தாழ்மையுடன் மன்னிப்புக் கேட்கிறேன். இப்படி மன்னிப்புக் கேட்பது நீதியானது. இப்படிக் கேட்பதோடு மற்றொன்றையும் கேட்கிறேன். திருச்சிலுவையின் வல்லமையால், கத்தியின் தர்க்க வாதங்களை உறுதியுடன் எதிர்த்த அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்களையும் நாம் அங்கீகரிக்க வேண்டுமென விரும்புகிறேன். பாவம் இருந்தது. அது மிகுதியாக இருந்தது. இதற்காக நாம் மன்னிப்புக் கேட்கிறோம். ஆயினும், பாவம் பெருகியிருந்த இடத்தில், பூர்வீக இன மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடிய அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்கள் வழியாக இறையருளும் மிகுதியாக இருந்தது. எனவே, துணிவோடும், தாழ்மையோடும், மதிப்புடனும், மனஅமைதியோடும் இயேசுவின் நற்செய்தியை அறிவித்த மற்றும் தொடர்ந்து அறிவித்துக்கொண்டிருக்கும் அருள்பணியாளர்களையும், துறவறத்தாரையும் நினைத்துப் பார்க்க வேண்டுமென உங்கள் அனைவரையும் கேட்கிறேன். இவர்களில் சிலர் பூர்வீக இன மக்களோடு தோள் கொடுக்கின்றனர் மற்றும் உயிரைவிடும் அளவுக்கு அம்மக்களின் பொதுவான இயக்கங்களோடு சேர்ந்து செயல்படுகின்றனர்.

இவ்வாறு உரையாற்றிக் கொண்டுவந்த திருத்தந்தை, வரலாற்றில் பல முக்கியமான கட்டங்களில், ஆதிக்கத்தையும், அடக்குமுறையையும், அடிமைமுறையையும்    திருஅவை பயன்படுத்தியது என்று சொல்லி, இலத்தீன் அமெரிக்க வரலாற்றில் திருஅவையின் பணிகளை இக்காலத்தில் சிலர் மறக்க அல்லது மறுக்க முயற்சிக்கின்றனர். இலத்தீன் அமெரிக்க மக்களின் தனித்துவத்தில் திருஅவை தனது பிள்ளைகளோடு ஓர் அங்கமாக உள்ளது. நம் விசுவாசம் புரட்சிகரமானதாக, சவாலாக இருப்பதால், இங்கு போன்று, பிற நாடுகளிலும் தனித்துவம் இழக்கப்படுகின்றது என்று கூறி மத்திய கிழக்கிலும், உலகின் பிற பகுதிகளிலும் நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் விசுவாசத்திற்காகச் சித்ரவதைப்படுத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர், இதுவும் கண்டனத்துக்குரியது என்று கூறினார். மேலும் தொடர்ந்தார் திருத்தந்தை...

துண்டு துண்டாக இடம்பெறும் இந்த மூன்றாவது உலகப் போர், நாம் இக்காலத்தில் அனுபவிக்கும் இந்தப் படுகொலை வடிவங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இதில் பொதுமக்கள் இயக்கங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. நீங்கள் சமூகக் கவிஞர்கள், தொழிலைப் படைப்பவர்கள், வீடுகளைக் கட்டுபவர்கள், உணவை உற்பத்தி செய்பவர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, உலகச் சந்தையால் பின்னுக்குத் தள்ளப்படும் மக்களுக்காக இருப்பவர்கள். எனவே இம்மக்கள், நீதி மற்றும் அமைதியின் பாதையில் மக்களை ஒன்றிணைக்க வேண்டும். நிலம், குடியிருப்பு, வேலை ஆகிய மூன்று உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவதற்கு உங்களை ஊக்கப்படுத்துகிறேன்.. இப்பூமியைப் பாதுகாப்பதில் உலகின் அரசுகள் கோழைத்தனத்தைக் காட்டுகின்றன. எனவே நீங்கள் தாய் பூமியைப் பாதுகாப்பதற்கு உழையுங்கள். வருங்காலம், பெரும் தலைவர்கள், பெரும் சக்திகள் மற்றும் உயர் குலத்தினரிடம் இல்லை, அடிப்படையில் அது பொது மக்களின் கரங்களில் உள்ளது. எனக்காகச் செபியுங்கள், நல்ல செப அலைகளை அனுப்புங்கள்... என்று 2வது உலக சமூகநல இயக்க மாநாட்டினரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.