2015-07-10 16:16:00

திருத்தந்தை-எவரும் புறக்கணிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை


ஜூலை,10,2015. சாந்தா குரூஸ் நகர் கிறிஸ்து மீட்பர் வளாகத்தில் திருப்பலியை நிறைவேற்றி பொலிவியா நாட்டின் 5வது தேசிய திருநற்கருணை மாநாட்டை ஆரம்பித்து வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியில், இயேசு, பாலைநிலத்தில் நான்காயிரம் பேருக்கு அற்புதமாய் உணவளித்த நற்செய்தி பகுதியை மையமாக வைத்து மறையுரையாற்றினார் திருத்தந்தை.

இத்திருப்பலிக்கு வருகை தந்திருப்பவர்கள், பாலைநிலத்தில் இயேசுவின் போதனையைக் கேட்கச் சென்ற மக்கள் போன்றவர்கள். இயேசுவிடம் தங்கள் குழந்தைகளுடன் வந்த அம்மக்கள், ஏமாற்றங்கள், அநீதிகள் போன்ற சுமைகளுடன் சென்றிருந்தனர். நாம் அடிக்கடி, இந்தப் பயணத்தில் சோர்வடைகிறோம். நம்பிக்கையை உயிரோட்டமாக வைத்திருப்பதற்குச் சக்தியை அடிக்கடி இழக்கிறோம். அச்சமயங்களில் நாம் நம்மை மட்டுமே நினைக்கிறோம், நாம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், நாம் அன்புகூரப்பட்டவர்கள் என்பதை மறக்கிறோம். நம் இதயங்கள் நம்பிக்கையை இழந்து மனச்சோர்வுக்கு உட்படும்போது நாம் ஒருவகையான உலகப்போக்கான சிந்தனைக்கு உட்படுகிறோம். எல்லாவற்றுக்கும் விலை உண்டு, அனைத்தையும் வாங்கி விடலாம், ஒவ்வொன்றையும் பேரம் பேசலாம் என்ற சிந்தனை இதில் ஏற்படுகின்றது. இம்மாதிரியான சிந்தனை, சிலருக்கு மட்டுமே இடமளிக்கின்றது. அதேசமயம், இத்தகைய சிந்தனையில், உற்பத்தி திறனற்ற, தகுதியற்ற, மதிப்பற்ற அனைவரும் ஒதுக்கப்படுகின்றனர். ஆனால், இம்மக்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம், இவர்கள் உண்பதற்கு ஏதாவது கொடுங்கள் என்று இயேசு சொல்கிறார். இவர்கள் திரும்பிப் போகத் தேவையில்லை, எந்த மனிதரும் புறக்கணிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை, நீங்களே அவர்கள் உண்பதற்கு ஏதாவது கொடுங்கள் என்று இயேசு சொல்கிறார். இந்நற்செய்தியில் இயேசு, அப்பத்தையும் மீனையும் எடுத்து ஆசிர்வதித்து, அவற்றைச் சீடர்களிடம் கொடுத்து மக்களுக்குப் பரிமாறச் சொல்கிறார். இயேசு மக்களின் வாழ்வையும், அனுபவங்களையும் கொண்டு அவர்களை ஆசிர்வதித்து, அவற்றைத் தம் தந்தையாம் இறைவனிடம் கொடுக்கிறார், மக்கள் தங்களிடம் உள்ளதைப் பகிருமாறு ஊக்கப்படுத்துகிறார். இயேசுவின் இந்த நினைவுச் செயல், மக்களின் பசியை எப்போதும் திருப்திப்படுத்துகின்றது.

இத்திருநற்கருணை மாநாடு, “உலகின் வாழ்வுக்காக பிட்கப்பட்ட அப்பம்” என்ற தலைப்பைக் கொண்டுள்ளது. திருநற்கருணை, ஒன்றிப்பின் அருளடையாளம். நாம் நம் தனிமனிதப் போக்கிலிருந்து வெளிவந்து சீடர்களாக சேர்ந்து வாழ்வதற்கு நம்மைத் தூண்டுகிறது. கிறிஸ்துவின் வாழ்வில் பகிர்ந்து கொள்ளும் திருநற்கருணைப் பேருண்மையின் நினைவை திருஅவை தொடர்ந்து கொண்டாடி வருகின்றது. கிறிஸ்துவின் வாழ்வில் பகிர்தல் என்பது, நாம் ஒருவர் ஒருவரிலிருந்து பிரிக்கப்பட்ட தனித்த ஆட்கள் அல்ல, ஆனால், நினைவுக்கூரப்படும் மக்கள், இந்த நினைவுகூரல், என்றென்றும் புதுப்பிக்கப்பட்ட மற்றும் என்றென்றும் பகிரப்பட்டதாகும்.

இவ்வாறு சாந்தா குரூஸ் நகர் கிறிஸ்து மீட்பர் வளாகத்தில் திருப்பலி மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.