2015-07-10 16:10:00

சாந்தா குரூஸ் நகரில் திருத்தந்தையின் திருப்பலி


ஜூலை,10,2015. திருத்தந்தை ஜூலை 8ம் தேதி இரவு தங்கியிருந்த சாந்தா குரூஸ் முன்னாள் பேராயர் இல்லத்திலிருந்து, ஜூலை 09, இவ்வியாழன் காலை, காலை 9.15 மணிக்கு சாந்தா குரூஸ் கிறிஸ்து மீட்பர் வளாகத்திற்குத் திறந்த காரில் புறப்பட்டார். அந்த வளாகத்தில் ஏறக்குறைய இருபது இலட்சம் விசுவாசிகள் பல வண்ண, பல இனங்களின் மரபு உடைகளில் அமர்ந்திருந்தனர். அவர்கள் மத்தியில் வலம் வந்து திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை. இத்திருப்பலி, பொலிவியாவின் தெற்கேயுள்ள Tarija நகரில் தொடங்கவிருந்த அந்நாட்டின் 5வது தேசிய திருநற்கருணை மாநாட்டின் ஆரம்பமாக இருந்தது. திருப்பலி மேடைக்குப் பின்புறத்தில் வத்திக்கான் மற்றும் பொலிவியா நாடுகளின் கொடிகள் அடுத்தடுத்த கம்பங்களில் பறந்து கொண்டிருந்தன. திருத்தந்தையும், ஆயர்களும் அருள்பணியாளர்களும் வெண்மை நிறத்தில் திருப்பலி உடுப்பு அணிந்திருந்தனர். எங்கும் வெண்மையாகத் தெரிந்தது. ஆனால் இலட்சக்கணக்கான விசுவாசிகள் பல வண்ண, மரபு உடைகளில் இருந்தனர். அரசுத்தலைவரும் இத்திருப்பலியில் கலந்து கொண்டார். கிறிஸ்து மீட்பர் வளாகத்தில், மீட்பராம் கிறிஸ்துவின் திருவுருவம், மிக உயரமான தூணில் கைகளை விரித்தபடி மக்களை அரவணைப்பதுபோல் உள்ளது. இவ்வளாகத்திலுள்ள Burger King உணவகம், இந்த நிகழ்வுக்காக மூடப்பட்டிருந்தது. முப்பது நிமிடங்கள் விசுவாசிகள் மத்தியில் திறந்த காரில் வந்த திருத்தந்தை, இந்த உணவகத்தில் திருப்பலி ஆடைகளை உடுத்தினார். எண்ணெய்யில் அதிகமான பொருள்கள் இங்கு பொறிக்கப்படும். இந்த இடம் இப்படி பயன்பட்டதற்கு Burger King நிர்வாகி Alfredo Troche அவர்கள் இத்திருப்பலி முடிவதற்கு முன்னரே, தனது முகநூலில் நன்றி தெரிவித்திருந்தார்.

இயேசு, பாலைநிலத்தில் நான்காயிரம் பேருக்கு அற்புதமாய் உணவளித்த நற்செய்தி பகுதியை மையமாக வைத்து இத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமுதாயத்தில் எந்த மனிதரும் புறக்கணிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். அன்னை மரியா போன்று, தாழ்மையான தம் ஊழியர்களுக்கு மாபெரும் காரியங்களைச் செய்யும் நம் ஆண்டவரில் நம்பிக்கை வைப்போம் என்று கூறினார் திருத்தந்தை.

இத்திருப்பலிக்குப் பின்னர் சாந்தா குரூஸ் முன்னாள் பேராயர் இல்லம் செந்று மதிய உணவருந்தி சிறிது நேரம் ஓய்வெடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.