2015-07-10 16:15:00

சாந்தா குரூஸ் நகரில் அருள்பணியாளர், துறவியர் சந்திப்பு


ஜூலை,10,2015. ஜூலை,09, இவ்வியாழன் மாலை 4 மணிக்கு, பொலிவியா நாட்டின் சாந்தா குரூஸ் தொன்போஸ்கோ பள்ளியில் அருள்பணியாளர், துறவியர் மற்றும் குருத்துவ மாணவர்களுக்கு உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இதில் ஓர் அருள்பணியாளர், ஓர் அருள்சகோதரி மற்றும் ஒரு குருத்துவ மாணவர் சான்று பகர்ந்தனர்.

ஆயர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், திருத்தந்தை உரையாற்றிக் கொண்டிருந்தபோது, இடையில் கைவிரல்களை ஒருமாதிரி பிசைந்து கொண்டு, பாவப்பட்ட இறைமக்கள் சமுதாயம், இவர்கள் பல நேரங்களில் இயேசுவைப் பின்செல்பவரின் தனிப்பட்ட நிலையை, மோசமான மனநிலையைக் கட்டாயமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சில தலைவர்களின் மனநிலை, இறைமக்களைத் தொடர்ந்து திட்டுவதும், அவர்களை அமைதியாய் இருக்கும்படி கோபமாகச் சொல்வதுமாக இருக்கின்றது என்று சொன்னார். உடனே எல்லாரும் சப்தமாகச் சிரித்தார்கள். மாம், இந்தக் குழந்தை அழுகிறது, நான் போதிக்கிறேன், அதனால் ஆலயத்தைவிட்டுத் தூக்கிச் செல் என்று சொல்வது வருத்தமாக உள்ளது. குழந்தையின் அழுகை, மேன்மைமிகு போதனையல்லவா என்றும் திருத்தந்தை கூறினார்.  

சாந்தா குரூஸ் நகர் தொன்போஸ்கோ பள்ளியில் நடந்த இச்சந்திப்பை நிறைவு செய்து அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற, எக்ஸ்போ ஃபேரியாவுக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். சாந்தா குரூஸ் நகரில் நடைபெற்ற மூன்று நாள் உலக சமூகநல இயக்கங்கள் மாநாட்டில் கலந்துகொண்ட 1500க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்களைச் சந்தித்தார். தங்களின் விவசாய நிலங்களை இழந்தோர், வேலை வாய்ப்பற்றோர், ஏழைகள் போன்றோரை உள்ளடக்கிய சமூகத்தின் விளிம்பிலிருக்கும்  மக்களின் சமூகநல இயக்கங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை, பாப்பிறை சமூக அறிவியல் கழகம் ஆகிய இரண்டின் ஆதரவுடன் கடந்த அக்டோபரில் முதல் உலக சமூகநல இயக்கங்கள் மாநாடு வத்திக்கானில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது பொலிவியா நாட்டில் இத்திருப்பீட அவைகளின் ஆதரவுடன் நடைபெற்றது.

இச்சந்திப்பில் கலந்துகொண்ட சமூக ஆர்வலர்களிடம், தனக்காகச் செபிக்குமாறும், நல்ல செப அலைகளைத் தனக்கு அனுப்புமாறும் இறுதியில் கேட்டுக்கொண்டார். இந்த ஆர்வலர்களில் பெரும்பாலானவர்கள் தென் மெரிக்கா மற்றும் திருத்தந்தையின் சொந்த நாடான அர்ஜென்டீனாவைச் சேர்ந்தவர்கள். பூர்வீக இனத்தைச் சேர்ந்த பொலிவியா அரசுத்தலைவர் ஈவோ மொராலெஸ் அவர்கள், அந்நாட்டில் திருத்தந்தைக்கு வரவேற்புரை வழங்கியபோது, திருஅவையின் கடந்தகால ஆதிக்கத்தைக் குறிப்பிட்டார். திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறியுள்ளது போன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மன்னிப்புக் கேட்டுள்ள இந்த நீண்ட உரையை அவரே தயாரித்தார், அவர் மன்னிப்புக் கேட்ட இச்செயல் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.  

இச்சந்திப்புடன் இவ்வியாழன் தின பயணத் திட்டங்கள் நிறைவடைந்தன. மேலும், சாந்தா குரூஸ் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருத்தந்தையின் பழைய நண்பரான, வயதான கர்தினால் Julio Terrazas அவர்களையும் சந்தித்தார், அதன் பின்னர் உறங்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வெள்ளி காலை 9.30 மணிக்கு சாந்தா குரூஸ் நகரிலுள்ள அந்நாட்டின் பெரிய Palmasola சிறைக்குச் சென்று ஏறக்குறைய ஒரு மணி நேரம் செலவிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இங்குள்ள ஏறக்குறைய ஐந்தாயிரம் கைதிகளுடன் சிறாரும் வாழ்கின்றனர். இவர்கள் இக்கைதிகளின் குழந்தைகள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.