2015-07-09 17:20:00

பொலிவியா அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தை உரை


ஜூலை,09,2015. பொலிவியா நாட்டின் அரசு அதிகாரிகள், தூதரக, கலாச்சார மற்றும் பொதுமக்கள் சமுதாயத்தின் பிரதிநிதிகளை La Paz நகர் பேராலயத்தில் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்தின் பொது நன்மைக்காக உழைப்பதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் 2ம் வத்திக்கான் பொதுச்சங்கம் பொதுநலன் பற்றி விளக்கியுள்ளது. இயற்கைச் சுற்றுச்சூழல், சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரச் சுற்றுச்சூழலோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. ஒவ்வொன்றும், ஒவ்வொன்றோடும் தொடர்பு கொண்டிருப்பதால் ஒவ்வொருவரும் மற்றவர்க்குத் தேவைப்படுகின்றனர். நம்மைச் சுற்றியுள்ள சமத்துவமின்மை சூழலோடு பழக்கப்படுவது நமக்கு எளிது. அதைப் பற்றிய உணர்வு இல்லாமலே வளமையோடு பொதுநலனை நாம் குழப்புகிறோம். வளமை, பொருளாதார வளமையோடு மட்டும் புரிந்துகொள்ளப்பட்டால் அது தன்னலப் போக்காக மாறும், தனியாட்களின் தேவைகளுக்கு ஆதரவளிக்கும், பிறர் பற்றி அக்கறையின்றி இருக்கச் செய்யும். இவ்வாறு இது புரிந்துகொள்ளப்படும்போது, வளமை உதவுவதற்காகப் பதிலாக, கலவரத்தையும் சமூகப் பாகுபாட்டையும் உண்டாக்கும், ஊழல் தீமைக்கும் கதவுகளைத் திறக்கும். மாறாக, வளமை என்பது, எனக்கு எது சிறந்தது என்பதிலிருந்து சமூகத்தில் அனைவருக்கும் சிறந்தது எது எனப் பார்ப்பதாகும். மேலும், பொது நன்மைக்கான பணியில், சிந்தனையாளர், ஊடகத்துறையினர் மற்றும் குடிமக்கள் கழகங்கள் ஆவலோடும், படைப்பாற்றல் திறனோடும் தங்களின் நடவடிக்கைகளை ஆற்றுவதற்கு, சுதந்திரம் எப்போதும் சிறந்த சூழலாக இருக்கின்றது. குடும்பத்தின் முக்கியத்துவம் பற்றியும் பேசிய திருத்தந்தை, வீடுகளில் வன்முறை, குடிபோதை, வேலை வாய்ப்பின்மை, முதியோரைக் கைவிடுதல், தெருச்சிறார் போன்ற குடும்பம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் எடுத்துச் சொன்னார்.

பல பிரச்சனைகள் குடும்பங்களில் சப்தமின்றி தீர்க்கப்படுகின்றன. ஆயினும், குடும்பங்களுக்கு உதவிகள் மறுக்கப்படும்போது, நலிந்தவர்களை அது பாதிக்கின்றது. அரசியல், கலாச்சார உலகம், மதங்கள் ஆகியவை ஒன்றிணைந்து வாழ வேண்டிய சவாலை பொலிவியா நாடு எதிர்நோக்குகின்றது. இதுவே ஒருங்கிணைப்புக்கு ஏற்ற காலம். நல்ல எதிர்காலத்தையும் அமைதியையும் மக்கள் அனுபவிக்குமாறு இந்த மாசற்ற மற்றும் அழகிய நாட்டிற்காகச் செபிக்கின்றேன். உங்கள் செபத்தில் என்னை தயவுசெய்து நினைவுகூருங்கள், எனக்குச் செபம் தேவைப்படுகின்றது

இவ்வாறு பொலிவியா நாட்டின் அரசு அதிகாரிகள், கலாச்சார மற்றும் பொதுமக்கள் சமுதாயத்தின் பிரதிநிதிகளுக்கு La Paz நகர் பேராலயத்தில் உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.