2015-07-09 17:47:00

ஈக்குவதோரில் நிறைவு நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகள்


ஜூலை,09,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஈக்குவதோர் நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின் 4வது நாள் மற்றும் இறுதி நாளான ஜூலை,08, இப்புதன் காலை 9.30 மணிக்கு, Tumbacoவில் அன்னை தெரேசா பிறரன்பு மறைபோதக சபையினர் நடத்தும் முதியோர் இல்லம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வில்லத்தில் முதியோரைச் சந்தித்த பின்னர், அங்கிருந்து 27 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற, El Quinche அன்னைமரியா தேசிய திருத்தலம் சென்றார். 1928ம் ஆண்டில் கட்டப்பட்ட இத்திருத்தலம், 1985ம் ஆண்டில் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. ஈக்குவதோர் நாட்டுப் பாதுகாவலரான El Quinche காணிக்கை அன்னைமரியா திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் 21ம் தேதி விழா கொண்டாடப்படுகின்றது.  El Quinche அற்புத அன்னை மரியா திருவுருவம், Diego de Robles என்ற புகழ்பெற்ற கலைஞரால் 1586ம் ஆண்டில் தேவதாரு மரத்தில் செதுக்கப்பட்டது. இவ்வன்னை மரியா பல அற்புதங்களைச் செய்து வருகிறார் மற்றும் பல தடவைகள் காட்சி கொடுத்துள்ளார் எனச் சொல்லப்படுகின்றது. இத்திருத்தலத்தில் முதலில் El Quinche அன்னைக்கு வணக்கம் செலுத்தி மலர்க் கொத்தையும் அர்ப்பணித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பிரேசில் நாட்டிலிருந்து மறைப்பணியாளராகப் பணியாற்றும் San Miguel de Sucumbios அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Celmo Lazzari அவர்கள் திருத்தந்தையை வரவேற்றார். பின்னர், ஆப்ரிக்க-ஈக்குவதோர் கலாச்சாரத்தின் பிரதிநிதியாக அருள்பணியாளர் சில்வினோ மினோ, அகுஸ்தீன் சபை அருள்சகோதரி மாரிசோல் சாண்டோவால் ஆகிய இருவரும் சாட்சி பகர்ந்தனர். இவர்களின் சாட்சியங்களைக் கேட்ட பின்னர் அத்திருத்தலத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான குருக்கள், துறவியர் மற்றும் குருத்துவ மாணவர்களிடம் பேசத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவர்களுக்குகென தயார் செய்திருந்த உரையை வாசிக்காமல்  நேரிடையாக எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை.

இச்சந்திப்பை முடித்து அங்கிருந்து 21 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற கிட்டோ “Mariscal Sucre” பன்னாட்டு விமான நிலையம் சென்றார். பிரியாவிடை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பொலிவியா நாட்டுக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். வழியில் ஈக்குவதோர் மற்றும் பெரு நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கு செபமும், நல்வாழ்த்தும் நிறைந்த தந்திச் செய்திகளை அனுப்பினார். 3 மணி 15 நிமிடங்கள் விமானப் பயணம் செய்தபோது மதிய உணவை விமானத்திலே முடித்தார். இப்புதன் பொலிவியா நேரம் மாலை 4.15 மணிக்கு, பொலிவியா நாட்டுத் தலைநகர் La Pazன் El Alto விமான நிலையம் சென்றடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.