2015-07-09 18:06:00

அ.பணி. Espinal சே.ச. கொல்லப்பட்ட இடத்தில் திருத்தந்தை செபம்


ஜூலை,09,2015 El Alto விமான நிலையத்திலிருந்து La Paz பேராயர் இல்லத்திற்குச் சென்ற வழியில் Chacaltayaவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாகனத்தைவிட்டு இறங்கி சிறிது நேரம் செபித்தார். அங்கு பெருமளவான மக்கள் கூடியிருந்தனர். கவிஞரும், ஊடகவியலாளரும், திரைப்படம் தயாரிப்பவரும், சமூக உரிமை ஆர்வலருமான இஸ்பானிய இயேசு சபை அருள்பணியாளர் Luis Espinal Camps அவர்களின் உடல், 1980ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட இடமாகும் அது. பொலிவியா வரலாற்றில் மிகுந்த இரத்தம் சிந்தப்பட்ட காலங்களில் ஒன்றான சர்வாதிகாரி Luis Garcia Meza ஆட்சியின்போது, போராட்டங்களை நடத்திய  சுரங்கத் தொழிலாளர் குடும்பங்களோடு வாழ்ந்தவர் கொலைசெய்யப்பட்ட அ.பணி Espinal.  இக்குரு, சர்வாதிகாரியின் ஆயுதப்படைப் பிரிவான உப இராணுவப் படைகளால் 1980ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி கைதுசெய்யப்பட்டார். இவரது உடல் அதற்கு அடுத்த நாள், Chacaltaya செல்லும் பாதையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவரது கொலை நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. La Pazல் மார்ச் 24ம் தேதி இடம்பெற்ற அடக்கச் சடங்கில் பெருமளவில் மக்கள் கலந்து கொண்டனர். மனித உரிமைகள், சனநாயகம் ஆகியவற்றை நிலைநிறுத்தப் போராடிய இக்குருவைக் கவுரவிக்கும் நோக்கத்திலும், பொலிவியா திரைப்படத் துறைக்கு இக்குரு ஆற்றிய பங்கை ஏற்கும் விதத்திலும், அரசுத்தலைவர் Evo Morales அவர்கள், 2007ம் ஆண்டில் மார்ச் 21ம் தேதியை, “பொலிவியா திரைப்பட நாள்” என அறிவித்தார்.  சுரங்கத் தொழிலாளரின் உரிமைக்காகக் குரல் கொடுத்த இயேசு சபை அருள்பணியாளர் Luis Espinal Camps அவர்கள், உடம்பெல்லாம் கிழிக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு பலவாறு சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். பிறரின் நலனுக்காக உழைக்காதவர், இறைவனிடம் செபிப்பதற்குத் தகுதியற்றவர் என்று சொல்லியுள்ளார் அருள்பணி Espinal.

இக்குரு கொல்லப்பட்ட இடத்தில் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொலிவியாவில் சுதந்திரத்திற்காக இக்குரு போராட வேண்டாமென விரும்பியவர்களுக்குப் பலியாகியுள்ளார். அருள்பணி Espinal, நற்செய்தியை அறிவித்தார். இந்த நற்செய்தி, அவரைக் கொன்றவர்களைத் தொல்லைப்படுத்தியது. எனவே சிறிது நேரம் அமைதியாகச் செபிப்போம் என்றார் திருத்தந்தை. இவரது ஆன்மா நிறை சாந்தி அடையட்டும், இங்குக் கூடியிருக்கும் நீங்கள் எல்லாரும் எனக்காகச் செபிக்க மறக்க வேண்டாமெனக் கேட்கிறேன் என்று கூறினார்.     

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.