2015-07-08 16:38:00

திருத்தந்தை - நம் விசுவாசம் எப்போதும் புரட்சிகரமானது


ஜூலை,08,2015. ஈக்குவதோர் தலைநகர் கிட்டோ, 200ம் ஆண்டு பூங்காவில் 12 இலட்சத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளுக்குத் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒற்றுமை மற்றும் நற்செய்தி அறிவிப்பை மையமாக வைத்து மறையுரையாற்றினார்.

நாம் இப்போது திருப்பலி நிறைவேற்றும் இந்தப் பூங்கா, இலத்தீன் அமெரிக்காவின் விடுதலைக்காக எழுப்பிய அழுகுரலின் 200ம் ஆண்டை நினைவுகூருகின்றது. சுதந்திரம் இல்லாமல், தவறாகப் பயன்படுத்தப்பட்டு, சுரண்டப்பட்டு, ஆதிக்கச் சக்திகளின் மனப்போக்கிற்கு உட்பட்டு வாழ்ந்த மனச்சாட்சியின் அழுகுரலாக இது இருந்தது. தவறாகப் பயன்படுத்தப்பட்ட நிலையிலிருந்து எழும்பிய விடுதலை மற்றும் சுதந்திரத்திற்கான அழுகுரல்களை, நற்செய்தி அறிவிப்பின் அழகான சவாலின்கீழ் பார்க்க விரும்புகிறேன். பெரிய வார்த்தைகளால் அல்லது சிக்கலான கருத்தியல்களால் நாம் நற்செய்தி அறிவிப்பதில்லை, ஆனால், இயேசுவைச் சந்திக்கும் அனைவரின் இதயங்கள் மற்றும் வாழ்வை நிறைக்கும் நற்செய்தியின் மகிழ்விலிருந்து நாம் அறிவிக்கிறோம். இயேசு வழங்கும் மீட்புக் கொடையை ஏற்பவர்கள், பாவம், துன்பம், அகவெறுமை மற்றும் தனிமை உணர்விலிருந்து விடுதலை பெறுவார்கள். தந்தையே, எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக.. இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும் என்ற இயேசுவின் செபம், உலகில் மறைப்பணிச் சூழலில் எழுப்பப்பட்டது. கிறிஸ்து இந்த வேண்டுதலை எழுப்பிய நேரம், அவர் தனது சொந்த உடலில், உலகின் மோசமானதை அனுபவித்தார். அதையும் பொருட்படுத்தாமல், அவர் இவ்வுலகின்மீது மிகவும் அன்பு செலுத்தினார். போர்கள் மற்றும் வன்முறையால் கிழிக்கப்பட்ட ஓர் உலகை நாமும் தினமும் சந்திக்கிறோம். பிரிவினைகளும், காழ்ப்புணர்வுகளும் நாடுகளுக்கிடையே, அல்லது சமுதாயத்தில் குழுக்களுக்கிடையே மட்டுமே இடம்பெறும் போராட்டங்கள் என்று நினைப்பது மேலெழுந்தவாரியானது. உண்மையில், அவை, நாம் ஒருவர் ஒருவருக்கு எதிராக அமைக்கும் மற்றும் ஒருவர் ஒருவரைப் பிரிக்கும் பரவலாகக் காணப்படும் தனிமனிதக் கோட்பாட்டின் வெளிப்பாடாகும். இந்தப் பாவ மரபு, மனிதரின் இதயத்தில் ஒளிந்திருந்து, சமுதாயத்திலும், இயற்கையிலும் அதிகமான துன்பங்களுக்கு காரணமாகின்றது.

இதையும் தவிர்த்து, கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் அழைப்பை சிரமேற்கொண்டு, அவரின் அருளை ஏற்று, நற்செய்தி அறிவிப்பு வழியாக ஒன்றிப்பை நோக்கிச் செல்லக் கடமைப்பட்டுள்ளனர். எனினும், ஒன்றிப்பு என்பது, ஒரே மாதிரியாக அல்லது வரையறுக்கப்பட்ட நிலைகளோடு இருப்பது அல்ல, இப்படி இருப்பது, உயர்ந்தோர் குழுவின் சமய உணர்வாகும். மாறாக, ஒன்றிப்பு என்பது, இயேசுவால் தெளிவாகப் பரிந்துரைக்கப்பட்ட செயலாகும். அதாவது, இயேசு, சமாரியர் உவமையில் விளக்கியிருப்பது போன்று, அடுத்தவர்மீது அக்கறை செலுத்துவதும், அன்பு கூருவதுமாகும்.

ஒன்றிப்புக்கான ஆவல், நற்செய்தியை மகிழ்வுடன் அறிவிப்பதை உள்ளடக்கியது. பகிர்ந்து கொள்வதற்கு நம்மிடம் அளப்பரிய விலைமதிப்பில்லாத சொத்து உள்ளது, பகிர்வதிலே ஒருவர் வளர்கிறார், பிறரின் தேவைகளை மேலும் அதிகமாக உணர்கிறார் என்ற உறுதிப்பாட்டில் நற்செய்தி அறிவிப்பதாகும். ஆன்மீக உலகப்போக்குத்தன்மை, அதிகாரம், மதிப்பு, இன்பம் அல்லது பொருளாதாரப் பாதுகாப்புக்கான பயனற்ற ஏக்கத்தில் நம் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தினால், ஒன்றிப்பு சுடர்விடுவது இயலாத காரியம். மேலும், இது, மிகவும் வறியவர்களையும், ஒதுக்கப்பட்டவர்களையும், குரலற்றவர்களையும் பாதிக்கிறது. எனினும், நற்செய்தி அறிவிப்பு, மதமாற்றத்தால் சாதிக்கப்படுவது அல்ல. இது, நற்செய்தி அறிவிப்பைக் கேலிக்கூத்தாக்கிவிடும். மாறாக,  நற்செய்தி அறிவிப்பு, சாட்சிய வாழ்வாலும், இறைவனுக்கும், திருஅவைக்கும் தூரமாக இருப்பதாக உணர்பவர்களைத் தாழ்மையுடன் கவர்வதாலும் சாதிக்கப்படுவதாகும். திருவெளிப்பாடு நூலில் உள்ளது போன்று கிறிஸ்து கதவருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறார், பொறுமையுடன் காத்திருக்கிறார். நற்செய்தி அறிவிப்பு நம் நம்பிக்கைகள், நம் அக்கறைகள், செயல்கள், குறிக்கோள்கள் போன்றவற்றையும், ஏன் நடைமுறைக்கு அப்பாற்பட்ட கண்ணோட்டங்களையும்கூட ஒன்றிணைக்கும் வழியாக உள்ளது.

இவ்வாறு மறையுரையாற்றிய திருத்தந்தை, இறுதியில், உடன்பிறப்பு உணர்வு ஒன்றிப்பு, தன்னையே வழங்குதல் மற்றும் ஒருவர் ஒருவரோடு நல்லுறவு கொள்ளும் செயல்கள் மூலம் சாட்சி பகருமாறு விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார். நாம் நம்மையே வழங்கும்போது இறைவனாம் தந்தையின் சாயலில், இறைவனின் பிள்ளைகள் என்ற உண்மையான தனித்துவத்தை நாம் கண்டுணர்வோம். இதுவே நற்செய்தி அறிவிப்பு, இதுவே நம் புரட்சி, ஏனெனில் நம் விசுவாசம் எப்போதும் புரட்சிகரமானது, இதுவே நம் மிக ஆழமான மற்றும் மிக உறுதியான அழுகுரல் என்று நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.