2015-07-08 16:36:00

கிட்டோ புனித பிரான்சிஸ் ஆலயத்தில் திருத்தந்தை


ஜூலை,08,2015. ஈக்குவதோர் கத்தோலிக்க பாப்பிறை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சந்திப்பை முடித்து நான்கு கிலோ மீட்டர் தூரம் திறந்த காரில் சென்று கிட்டோ புனித பிரான்சிஸ் ஆலயத்தை அடைந்தார். பிரான்சிஸ்கன் சபையினரின் இந்த ஆலயம், கிட்டோ நகரில் முக்கியமான ஆலயங்களில் ஒன்றாகும். இது இலத்தீன் அமெரிக்காவிலே மிகப் பழமையான ஆலயமும் ஆகும். கிட்டோ நகர் உருவாக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் சென்று, 1536ம் ஆண்டில் இவ்வாலய கட்டுமானப் பணிகள் தொடங்கின. 1680ம் ஆண்டில் இது கட்டி முடிக்கப்பட்டது. நிலநடுக்கங்களால் இவ்வாலயம் பலமுறை சேதமடைந்தது. இலத்தீன் அமெரிக்காவில் காலனி ஆதிக்கத்தில் கலைவேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட மிகப்பெரிய ஆலயமாகும் இது. இதனாலே இது புதிய உலகின் Escorial என அழைக்கப்படுகின்றது. இந்த ஆலய முகப்பில் கிட்டோ நகர் மேயர் திருத்தந்தைக்கு அந்நகரின் சாவியை அளித்தார். இந்தச் சாவியைப் பெற்று ஈக்குவதோர் நாட்டின் அரசியல் மற்றும் சமூகக் கொள்கை அமைப்பாளர்களுக்கு அவ்வாலயத்தில் உரையாற்றினார் திருத்தந்தை. மேயர், நகரின் சாவியை அளித்திருப்பதால், நான் இங்கு சொந்த வீடாக உணர்கிறேன் என்றார். ஈக்குவதோர் நாட்டின் கிறிஸ்தவத் தொழிலாளர் கழகத் தலைவர் உட்பட ஓர் ஆண், இரு பெண்கள் என, மூன்று தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். திருத்தந்தையை வாழ்த்திய 85 வயது பெண் ஒருவர், தான் அறுபது ஆண்டுகளாக மறைக்கல்வி ஆசிரியராகப் பணியாற்றுவதாகத் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் மற்றும் டவுன் சின்ட்ரோம் நோயாளிகளின் இன்னிசையும் இடம்பெற்றது. இதன்பின்னர் தனது உரையை ஆரம்பித்த திருத்தந்தை, அவையோர் பக்கம் முழுவதுமாகத் திரும்பாமல் ஒரு பக்கமாகத் திரும்பி உரையாற்றுவதற்கு முதலில் மன்னிப்புக் கேட்டார். ஏனெனில் விழா மேடைக்கு வெளிச்சம் ஒரு பக்கத்திலிருந்து வந்ததாலும், தான் வாசிப்பதற்கு வெளிச்சம் தேவைப்பட்டதாலும் இவ்வாறு திரும்பியிருப்பதாக விளக்கம் சொன்னார் திருத்தந்தை. இச்சந்திப்பில் உரையாற்றிய திருத்தந்தை, ஒருமைப்பாட்டுணர்வுக்கும், உள்ளூர் அமைப்புக்கும் குடும்பத்தைத் தங்களின் முன்மாதிரிகையாக கொள்ளுமாறும், சமுதாயத்தை தங்களின் குடும்பம் போன்று அன்பு கூருங்கள் என்றும் அரசியல் மற்றும் சமூகக் கொள்கை அமைப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டார். இவ்வுரையை நிறைவு செய்த பின்னர், கிட்டோ நகரிலுள்ள La Iglesia de la Compañía என்ற இயேசு சபையினரின் ஆலயம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.