2015-07-08 16:41:00

கிட்டோ இயேசு சபையினரின் ஆலயத்தில் திருத்தந்தை


ஜூலை,08,2015. கிட்டோவில் ஓர் ஆலயம், ஒரு பள்ளி மற்றும் ஒரு துறவு மடத்தை நிறுவும் நோக்கத்தில், Juan de Hinojosa, Diego González Holguín, Baltasar de Piñas, Juan de Santiago ஆகிய நான்கு இயேசு சபை குருக்கள் 1586ம் ஆண்டு ஜூலை 19ம் நாள் கிட்டோவுக்கு முதன்முதலாகச் சென்றனர். அச்சமயத்தில் ஆலயங்கள் கட்டுவதற்கு பிரான்சிஸ்கன், புனித கன்னிமரியா இரக்க சபையினர், அகுஸ்தீனியன் மற்றும் தொமினிக்கன் சபையினருக்கே நகர நிர்வாகம் அனுமதியளித்தது. ஆயினும், 1587ம் ஆண்டு இயேசு சபையினருக்கு அனுமதி கிடைத்தது. 1602ம் ஆண்டில் இத்தாலியின் நேப்பிள்ஸ் அருள்பணியாளர் நிக்கோலாஸ் துரான் மாஸ்திரெல்லி அவர்கள், கிட்டோ இயேசு சபை கல்லூரித் தலைவராக 1602ம் ஆண்டில் கிட்டோ சென்றார். La Iglesia de la Compañía என்ற இயேசு சபையினரின் ஆலயம், இந்த இயேசு சபை அருள்பணியாளர் கனவால் எழுந்தது. இவரே இதற்கு 1605ம் ஆண்டில் முதல் அடிக்கல் நாட்டினார். இது, தென் அமெரிக்காவில் இஸ்பானிய பாரூக் கலைவண்ணத்தில் கட்டப்பட்டுள்ள மிக அழகிய ஆலயங்களில் ஒன்றாகும். ஈக்குவதோரின் மிக அழகான ஆலயம் என்றும் சொல்லப்படும் இவ்வாலயத்தின், நீளமான மத்திய பகுதி புகழ் பெற்றது. இது சிறந்த மர வேலைப்பாடுகளைக் கொண்டு தங்க இலைகளால் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது. உரோம் நகரில் 1580ல் கட்டப்பட்ட இயேசு ஆலயம், 1650ல் கட்டப்பட்ட புனித இஞ்ஞாசியார் ஆலயம் ஆகிய இரண்டின் பிரதிபலிப்புகளை இதில் காணலாம். இவ்வாலயத்தின் முகப்பிலுள்ள வியாகுல அன்னை திருவுருவத்திற்கு முன்பாக திருத்தந்தையை இயேசு சபையினர் வரவேற்றனர். இங்கு செபித்த பின்னர், கிட்டோ திருப்பீடத் தூதரகம் சென்றார் திருத்தந்தை. அங்கு இரவு உணவருந்தி உறங்கச் சென்றார். இத்துடன் ஈக்குவதோர் நாட்டின் 3வது நாள் பயண நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

இலத்தீன் அமெரிக்கக் கண்டத்திற்கான இத்திருத்தூதுப் பயணத்தின் நான்காவது நாளாகிய ஜூலை 08, இப்புதன் காலை 7.30 மணிக்கு, கிட்டோ திருப்பீடத் தூதரகத்தில் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்குப் பிரியாவிடை சொல்லி அங்கிருந்து 21 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Tumbaco பிறரன்பு மறைபோதக சபை நடத்தும் முதியோர் இல்லம் சென்றார். பின்னர் ஈக்குவதோர் நாட்டு குருக்கள், துறவியரைச் சந்தித்தல் மற்றும் பொலிவியா நாட்டுக்குப் புறப்படுதல் திருத்தந்தையின் இப்புதன் திருத்தூதுப் பயண நிகழ்வுகளாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.