2015-07-08 16:28:00

ஈக்குவதோரில் 3வது நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகள்


ஜூலை,08,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஈக்குவதோர் நாட்டிற்கான 3வது நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகள் இச்செவ்வாய் உள்ளூர் நேரம் காலை 8 மணிக்கு ஆரம்பமாயின. கிட்டோ நகர் திருப்பீடத் தூதரகத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற 200ம் ஆண்டு நினைவு பூங்காவிற்குக் காரில் சென்றார் திருத்தந்தை. இப்பூங்கா, தென் அமெரிக்காவில் 1809ம் ஆண்டு தொடங்கிய இஸ்பானிய காலனி ஆதிக்கத்திற்கு எதிராக முதன்முதலில் போராட்டங்கள் இடம்பெற்றதை நினைவுகூர்கின்றது. கிட்டோ நகர் பழைய விமான நிலையத்தில் 125 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட பசுமையான இப்பூங்கா, 2013ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி திறக்கப்பட்டது. இப்பூங்காவிலுள்ள ஓர் அறையில் ஈக்குவதோர் நாட்டின் ஏறக்குறைய 40 ஆயர்களை முதலில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆயர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இப்பூங்காவில் திருப்பலி நிறைவேற்றத் தயாரானார் அவர். திருத்தந்தை திறந்த காரில் மெதுவாக இம்மக்கள் மத்தியில் வலம் வந்து இச்செவ்வாய் உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்குத் திருப்பலியைத் தொடங்கினார். அப்போது இந்திய-இலங்கை நேரம் செவ்வாய் இரவு 9 மணியாகும். கிட்டோ நகரின் மொத்த மக்கள் தொகையே ஏறக்குறைய 16 இலட்சம்தான். ஆனால் திருத்தந்தை நிறைவேற்றிய இத்திருப்பலியில் 12 இலட்சத்துக்கு மேற்பட்ட விசுவாசிகள் கலந்து கொண்டனர். ஒற்றுமை மற்றும் நற்செய்தி அறிவிப்பை மையமாக வைத்து மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திருப்பலியின் இறுதியில் அனைவருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, எனக்காகச் செபிக்க மறவாதீர்கள் என்று கேட்டுக்கொண்டு தனது அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார். பின்னர் அங்கிருந்து கிட்டோ நகர் திருப்பீடத் தூதரகம் சென்று மதிய உணவையும் அருந்தினார். மாலை 4.15 மணியளவில் அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற ஈக்குவதோர் கத்தோலிக்க பாப்பிறை பல்கலைக்கழகத்திற்கு திறந்த காரில் சென்றார். 1946ம் ஆண்டில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், கிட்டோ உயர்மறைமாவட்டத்திற்குச் சொந்தமானது. இயேசு சபை அருள்பணியாளர்கள் இதனை ஆரம்பமுதல் இன்றுவரை நிர்வகித்து வருகின்றனர். 18க்கும் மேற்பட்ட துறைகள் உள்ள இங்கு, ஏறக்குறைய முப்பதாயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இப்பல்கலைக்கழகத்தில், அந்நாட்டின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  Laudato Si’ அதாவது இறைவா உமக்கே புகழ் என்ற தனது அண்மைத் திருமடலிலிருந்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.