2015-07-07 16:27:00

திருத்தந்தை பிரான்சிஸ் - கிட்டோ பேராலயம் சந்திப்பு


ஜூலை,07,2015. ஈக்குவதோர் நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாளான இத்திங்கள் இரவு 8.30 மணியளவில் கிட்டோ பேராலயத்திலும், அதன் வளாகத்திலும் ஆயிரக்கணக்கான விசுவாசிகள் காத்துக்கொண்டிருந்தனர். அங்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு பேராலயத்தின் நுழைவாயிலில் மலர்க்கொத்து அளிக்கப்பட்டது. அதை பேராலயத்திலுள்ள அன்னை மரியா திருவுருவத்திடம் வைத்து சிறிது நேரம் செபித்தார். பின்னர் செபமாலையை, அத்திருவுருவத்தின் தோள்களைச் சுற்றி அணிவித்தார். பின்னர் திருநற்கருணை முன்பாகவும் சிறிது நேரம் செபித்தார் திருத்தந்தை. அப்பேராலயத்திற்கு திருப்பலி பாத்திரம் ஒன்றையும் பரிசாக வழங்கினார். அதன் பின்னர் பேராலயத்தைவிட்டு வெளியே வந்து அங்குக் காத்துக்கொண்டிருந்த மக்களிடம்,

உங்கள் ஒவ்வொருவருக்கும், உங்கள் குடும்பங்களுக்கும், உங்கள் அனைவரின் அன்பர்களுக்கும், இந்த மாபெரும் மக்களுக்கும், இந்த மேன்மையான ஈக்குவதோர்   மக்களுக்கும் ஆசிர் அளிக்கப் போகிறேன். அதனால் எந்த வேறுபாடுகளும் இருக்காது, ஒதுக்கப்பட்டதாக, தனிமைப்படுத்தப்பட்டதாக யாரும் உணர முடியாது. எல்லாரும் நம் உடன்பிறப்புகள், இந்தச் சிறப்புமிக்க ஈக்குவதோர் மக்களில் யாரும் விலக்கப்பட்டவர்களாக இருக்கமாட்டார்கள். எனது ஆசிருக்கு முன்னர் எல்லாரும் சேர்ந்து ஆவே மரியா அதாவது அருள் நிறைந்த மரியே வாழ்க என்ற செபத்தைச் செபிப்போம் என்று சொல்லி எல்லாரோடும் சேர்ந்து செபித்தார் திருத்தந்தை. பின்னர் ஆசிர் வழங்கினார். நல்ல இரவாக உங்களுக்கு அமையட்டும். நாளை பார்ப்போம் என்று அம்மக்களிடமிருந்து விடை பெற்றார் திருத்தந்தை. இதுவே ஈக்குவதோர் நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாளின் கடைசி நிகழ்வாகும். திருத்தந்தை பேராலயத்தை விட்டுச் சென்று கொண்டிருந்தபோது, பிரான்சிஸ், பிரான்சிஸ், ஈக்குவதோரை ஆசிர்வதியும். நீவீர் மீட்பராம் கிறிஸ்துவின் தூதர் என்று மக்கள் கூட்டம் பாடிக்கொண்டிருந்தது.

கிட்டோ பேராலயம் சிறப்பான அமைப்பைக் கொண்டது. முதலில் இது, சுட்ட செங்கற்களாலும், கூரைப் புல்லாலும் கட்டப்பட்டது. பின்னர் இப்பேராலயம், புதிய மறைமாவட்டத்தின் ஆயரின் ஆலயமாகவும், மத்திய வழிபாட்டுத் தலமாகவும் மாற வேண்டியிருந்ததால், 16ம் நூற்றாண்டின் பாதியில் மீண்டும் கட்டப்பட்டது. கிட்டோ நகர் Pichincha மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இம்மலையிலிருந்து எடுத்துவரப்பட்ட கற்களால் 1562ம் ஆண்டு முதல், மூன்று ஆண்டுகளுக்கு இது கட்டப்பட்டு 1572ம் ஆண்டு திருப்பொழிவு செய்யப்பட்டது. நிலநடுக்கங்களால் பல தடவைகள் இப்பேராலயம் சேதமடைந்தது. பின்னர் 18ம் நூற்றாண்டின் மத்திய இறுதிப் பகுதியில் இது சீரமைக்கப்பட்டது. இப்போது காணப்படும் பேராலயம் இதுவேயாகும்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.