2015-07-07 16:23:00

கிட்டோவில் அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை


ஜூலை,07,2015. Guayaquilவிலிருந்து 45 நிமிடம் விமானப் பயணம் செய்து இத்திங்கள் உள்ளூர் நேரம் மாலை 6 மணிக்கு கிட்டோ “Mariscal Sucre” பன்னாட்டு விமான நிலையத்தைச் சென்றடைந்தார். அப்போது இந்திய இலங்கை நேரம் இச்செவ்வாய் காலை 4.30 மணியாகும். கிட்டோ “Mariscal Sucre” பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Carondelet அரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். கிட்டோ நகரின் மையத்தில் சுதந்திர வளாகத்தில் அமைந்துள்ள இம்மாளிகை, 18ம் நூற்றாண்டில் இஸ்பானிய கட்டட கலைஞர் அந்தோணியோ கார்சியாவால் கட்டப்பட்டது. இம்மாளிகையில் ஈக்குவதோர் நாட்டு அரசுத்தலைவர் Rafael Correa அவர்களையும், பின்னர் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்தார். பரிசுப்பொருள்களும் பரிமாறப்பட்டன. உரோம் புனித பவுல் பசிலிக்காவில் திருநற்கருணை சிற்றாலயத்திலுள்ள அன்னைமரியா குழந்தை இயேசுவைத் ஏந்தியிருக்கும் திருப்படத்தின் நகலை அரசுத்தலைவருக்குப் பரிசாக அளித்தார் திருத்தந்தை. இத்திருப்படம் வெனிஸ் கலைஞர்களால் 13ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த அன்னைமரியா படத்தின் முன்பாக, 1541ம் ஆண்டு அகஸ்ட் 22ம் தேதி புனித இலொயோலா இஞ்ஞாசியாரும், அவரின் முதல் தோழர்களும் வார்த்தைப்பாடுகளைக் கொடுத்தனர். இதுவே இயேசு சபையின் ஆரம்பமாகும். கிட்டோ அரசுத்தலைவர் மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பை முடித்து அங்கிருந்து கிட்டோ நகர் பேராலயத்திற்கு நடந்து சென்றார் திருத்தந்தை. அரசுத்தலைவர் Correa அவர்களும் திருத்தந்தையுடன் சென்றார். கிட்டோ பேராலயத்தில் செபித்து அன்னைமரியா பாதத்தில் மலர்க்கொத்தை வைத்து செபமாலையும் அணிவித்தார் திருத்தந்தை. விசுவாசிகளையும் ஆசிர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிட்டோ பேராலயத்திலிருந்து திருப்பீடத் தூதரகத்திற்கு 40 கிலோ மீட்டர் தூரம் காரில் சென்று இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை.

ஈக்குவதோர் நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின் மூன்றாவது நாளான ஜூலை 07, இச்செவ்வாய் காலை 8 மணிக்குப் பயண நிகழ்வுகள் தொடங்கின. ஈக்குவதோர் நாட்டு ஆயர்களைச் சந்தித்தல், கிட்டோ 200ம் ஆண்டு பூங்காவில் திருப்பலி நிறைவேற்றுதல், கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் சென்று கல்வித்துறையினருக்கு உரையாற்றுதல், நகரின் சாவியைப் பெறுதல், குடிமக்களைச் சந்தித்தல் போன்ற நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஜூலை,08 இப்புதனன்று ஈக்குவதோர் நாட்டிலிருந்து பொலிவியா நாட்டிற்குச் செல்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.