2015-07-07 16:10:00

ஈக்குவதோரில் 2வது நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகள்


ஜூலை,07,2015. தென் அமெரிக்காவிலுள்ள ஈக்குவதோர் நாட்டிற்கு உரோம் நகரிலிருந்து 13 மணி நேரம் விமானப் பயணம் செய்து தலைநகர் கிட்டோவை, இஞ்ஞாயிறு மாலை 3 மணிக்குச் சென்றடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். விமான நிலையத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றி அந்நாளை நிறைவு செய்தார். அப்போது உள்ளூர் நேரம் இரவு 9 மணி. அச்சமயத்திலும், கிட்டோ திருப்பீடத் தூதரகத்திற்கு வெளியே காத்துக்கொண்டிருந்த மக்களை வாழ்த்தினார். அப்போது உரோம் நேரம் திங்கள் அதிகாலை 4 மணி. இத்திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாளான இத்திங்கள் காலை 8 மணிக்கெல்லாம் பயண நிகழ்வுகளை மீண்டும் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். நீண்ட பயணத்தின் களைப்போ, கால இடைவெளி வேறுபாடோ, 30 டிகிரி செல்சியுஸ் வெப்பமோ எதுவும், 78 வயதுக்கும் மேற்பட்ட திருத்தந்தையைப் பாதித்துபோல் தெரியவில்லை. வழக்கமான புன்முறுவலுடனும், உற்சாகத்துடனும் காணப்பட்டார் திருத்தந்தை. இத்திங்கள் காலை கிட்டோவிலிருந்து Guayaquil நகருக்கு விமானத்தில் சென்றார். பசிபிக் கடற்கரையில் அமைந்துள்ள Guayaquil துறைமுக நகரம், ஈக்குவதோர் நாட்டின் முக்கிய வர்த்தக மற்றும் நாட்டின் முதல் பெரிய நகரமாகும். Santiago de Guayaquil என்பது இந்நகரின் முழுப்பெயராகும். Guaya என்ற பூர்வீக இனத் தலைவர் மற்றும் அவரின் மனைவி quil ஆகிய இருவரின் பெயரால் இந்நகர் அழைக்கப்படுகின்றது. இவர்கள் இஸ்பானிய காலனி ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள். சுற்றுலாவுக்கும் புகழ்பெற்ற இந்நகரத்தின் இறைஇரக்க பசிலிக்காவுக்கு முதலில் சென்றார் திருத்தந்தை.

வருகிற டிசம்பரில் இறைஇரக்க ஜூபிலி ஆண்டு ஆரம்பிக்கவுள்ள வேளையில், இந்தப் பசிலிக்கா சென்ற திருத்தந்தை, வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரைச் சந்தித்து அனைவரையும் அன்னைமரியாவிடம் செபிக்குமாறு கூறினார். பின்னர் அவர்களிடம், உங்களுக்காக இயேசுவிடம், அவரின் கருணைக்காக மன்றாடுவேன். அவர் உங்களைப் பராமரிப்பார். நீங்கள் எனக்கு எதுவும் தர வேண்டாம், ஆனால் எனக்காகச் செபியுங்கள், செபிப்பதாக எனக்கு நீங்கள் உறுதியளியுங்கள் என்று கேட்டு ஆசிரும் அளித்தார். உங்களின் கிறிஸ்தவச் சான்றுக்கு நன்றி. நான் இப்போது திருப்பலி நிறைவேற்றப் போகிறேன் என்று சொல்லி விடைபெற்று, அங்கிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Quayaquil நகரின் Samanes பூங்காவுக்குச் சென்றார். அங்குக் கூடியிருந்த பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட விசுவாசிகள் மத்தியில் திறந்த காரில் மெதுவாக வலம் வந்து திருப்பலியை ஆரம்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியில், கானாவில் திருமண நிகழ்வை(யோவா.2:1-11) மையமாக வைத்து மறையுரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு கூரவும், பிறருக்குத் தொண்டு புரியவும், பேராசையை அல்ல, மாறாக நன்றியை வெளிப்படுத்தவும், பிறரைப் புண்படுத்தியிருக்கும்போது மன்னிப்புக் கேட்கவும் இல்லத் திருஅவையாகிய குடும்பத்தில் நாம் கற்றுக் கொள்கிறோம் என்று கூறினார்.

ஈக்குவதோர் நாட்டின் புகழ்பெற்ற Guayaquil துறைமுக நகரத்தில் இத்திருப்பலியை நிறைவேற்றி அனைவரையும் ஆசிர்வதித்து அங்கிருந்து 21 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இயேசு சபையினரின் புனித சேவியர் கல்வி மையத்திற்கு காரில் சென்றார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.