2015-07-06 15:47:00

திருத்தந்தையின் 9வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம்


ஜூலை,06,2015. “நற்செய்தியின் மகிழ்வுக்குச் சாட்சியாக இருக்க விரும்புகிறேன்” என்று சொல்லி, இலத்தீன் அமெரிக்காவுக்கான தனது இரண்டாவது திருத்தூதுப் பயணத்தை ஜூலை,05, இஞ்ஞாயிறு உரோம் நேரம் காலை 9.30 மணிக்குத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இலத்தீன் அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் திருத்தந்தையாகிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக கத்தோலிக்க இளையோர் நிகழ்வில் கலந்து கொள்வதற்கென 2013ம் ஆண்டு பிரேசில் சென்றார். தற்சமயம் அக்கண்டத்திற்கான இரண்டாவது திருத்தூதுப் பயணத்தை மிகுந்த ஆர்வத்துடன் தொடங்கியுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த 9வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தில், திருத்தந்தை அந்நாடுகளுக்கு ஏற்கனவே அனுப்பிய காணொளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது போன்று, ஈக்குவதோர், பொலிவியா, பராகுவாய் ஆகிய “மூன்று சகோதரிகள்” நாடுகளுக்குச் செல்கிறார். ஒரு வாரத்திற்கு மேற்பட்ட இப்பயணம், 24 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கொண்டுள்ளது. சமதளமான இடங்கள், கடல் மட்டத்திற்கு நான்காயிரம் மீட்டருக்கு மேற்பட்ட உயரமான பகுதிகள், 3 செல்சியுஸ் டிகிரி முதல் 40 செல்சியுஸ் டிகிரி காலநிலை, அட்லாண்டிக் கடலுக்கும்,  ஆன்டெஸ் மலைக்கும் இடைப்பட்ட பகுதி என, பல்வேறு காலநிலை, இடச் சூழ்நிலைகளில் 78 வயதுக்கு மேற்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயணம் மேற்கொள்கிறார். இந்த மூன்று நாடுகள் ஒவ்வொன்றிலும் 48 மணி நேரம் பயண நிகழ்வுகளை நிறைவேற்றுகிறார். அரசுத்தலைவர்களைச் சந்திப்பது, ஆயர்களுடன் அமர்ந்து கலந்துரையாடுவது, அரசு அதிகாரிகளைச் சந்திப்பது, குருக்கள், துறவியரைச் சந்திப்பது, கைதிகளைச் சந்திப்பது, சிறாரை, முதியோரைச் சந்திப்பது, அன்னைமரியா திருத்தலம் செல்வது என பல கூறுகளைக் கொண்டிருக்கிறது இத்திருத்தூதப் பயணம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.