2015-07-06 16:07:00

ஈக்குவதோர், ஒரு கண்ணோட்டம்


ஜூலை,06,2015. ஈக்குவதோர், தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஒரு குடியரசு நாடாகும். வடக்கில் கொலம்பியாவும், கிழக்கிலும் தெற்கிலும் பெருவும் இதன் எல்லை நாடுகளாக அமைந்துள்ளன. மேற்கில் பசிபிக் பெருங்கடல் உள்ளது. 16ம் நூற்றாண்டில் இஸ்பெயினின் காலனி நாடாக ஏறக்குறைய 300 ஆண்டுகள் இருந்த ஈக்குவதோர், 1820ம் ஆண்டில் விடுதலையடைந்து கொலம்பியாவுடன் சேர்க்கப்பட்டது. பின்னர் 1830ம் ஆண்டில் இந்நாடு முழு விடுதலை பெற்றது. பல்வேறு பூர்வீக இனத்தவர் இங்கு வாழ்கின்றனர். இறைவன், தாய்நாடு, சுதந்திரம் ஆகியவை இந்நாட்டின் விருதுவாக்காகும். அதிகாரப்பூர்வ மொழி இஸ்பானியம். பசிபிக் பெருங்கடலிலுள்ள இந்நாட்டின் Galápagos தீவுகளில் பல அபூர்வத் தாவரங்களும், விலங்குகளும் உள்ளன. இவ்வாறு இந்நாடு வளமான இயற்கையியலையும் கொண்டுள்ளது. இந்நாட்டின் பொருளாதாரம், குறிப்பாக, பெட்ரோலியம் மற்றும் வேளாண் உற்பத்திப் பொருள்களால் வளர்ந்து வருகின்றது. ஈக்குவதோர் நாட்டுத் தலைநகர் கிட்டோவின் முழுப்பெயர் San Francisco de Quito ஆகும். இது கடல்மட்டத்திற்கு 2,850 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்நகரம், உலகில் மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் தலைநகராகும். ஆன்டெஸ் மலைப்பகுதியில் எரிமலை வாய்ப்பு உள்ள இடத்தில், Guayllabamba ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள இந்நகரம், அந்நாட்டின் 2வது பெரிய நகரமாகும். தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியத்தின் தலைமை இடமும் இந்நகரில் உள்ளது. கிட்டோவும், போலந்தின் கிராக்கோவ் நகரும், ஐ.நா.வின் யுனெஸ்கோவால், முதலில் அறிவிக்கப்பட்ட உலக கலாச்சாரப் பாரம்பரிய வளம் கொண்ட நகரங்களாகும். பூமத்திய ரேகைக்குத் தெற்கே 25 கிலோ மீட்டர் தூரத்தில் கிட்டோ அமைந்துள்ளது.     

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.