2015-07-06 10:43:00

ஈக்குவதோரில் திருத்தந்தை – கிறிஸ்து நெருக்கமாக இருக்கிறார்


ஜூலை,06,2015. இலத்தீன் அமெரிக்காவுக்கு நான் மீண்டும் திரும்பி வருவதற்கும், இந்த அழகான ஈக்குவதோர் நாட்டில் உங்களோடு இருப்பதற்கும் வாய்ப்பளித்த இறைவனுக்கு முதலில் நன்றி சொல்கிறேன். நீங்கள் எனக்களித்த வரவேற்பைப் பார்த்து மகிழ்வடைகிறேன். மனது நன்றியால் நிறைந்துள்ளது. இந்தச் சிறந்த நாட்டு மக்களில் தெளிவாகத் தெரியும் நல்வரவேற்பின் அடையாளமாக இது உள்ளது. இனிய வரவேற்புரையாற்றிய அரசுத்தலைவருக்கும். பிற அரசு அதிகாரிகளுக்கும் எனது சகோதர ஆயர்களுக்கும், இந்நாட்டின் விசுவாசிகளுக்கும், தங்களின் இதயங்களையும், வீடுகளையும், நாட்டையும் எனக்கு இன்று திறந்துள்ள அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், உண்மையான பாசத்தையும், பாராட்டையும் தெரிவிக்கிறேன்.

ஈக்குவதோர் நாட்டிற்கு, மேய்ப்புப்பணி காரணமாக, நான் பலமுறை வந்துள்ளேன். இன்றும், இறைவனின் கருணைக்கும், இயேசு கிறிஸ்துவில் வைத்துள்ள விசுவாசத்துக்கும் சாட்சியாக நான் வந்துள்ளேன். நூற்றாண்டுகளாக, இந்நாட்டு மக்களின் தனித்துவத்தை விசுவாசம் வடிவமைத்து மிகுந்த கனிகளையும் தந்துள்ளது. இந்நாட்டின் முக்கிய புனிதர்களாகிய Mariana de Jesus, Miguel Febres, Narcisa de Jesús, இன்னும், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் இந்நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது Guayaquilல் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்ட Mercedes de Jesús Molina ஆகியோர் உட்பட விசுவாசத்தின் பல கனிகளைக் குறிப்பிடலாம். இவர்களும், இவர்களைப் போன்ற மற்றவர்களும், தங்களின் விசுவாசத்தை ஆர்வத்துடனும், ஆழமாகவும் வாழ்ந்துள்ளனர். இவர்கள் தங்களின் இரக்கச் செயல்களால், அவர்கள் காலத்தில் ஈக்குவதோர் சமுதாயம் பல்வேறு வழிகளில் முன்னேற உதவியுள்ளனர்.

இந்த நம் காலத்திலும்கூட, வேறுபாடுகளை மதிக்கவும், உரையாடலையும், முழுப்பங்கீட்டையும் ஊக்குவிக்கவும் இக்காலத்திய சவால்களைச் சந்திப்பதற்கு நற்செய்தியில் முக்கிய திறவுகோலைக் காண முடியும். இதன்மூலம், ஏற்கனவே நிலவும் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் காணப்படும் வளர்ச்சியால், ஒவ்வொருவருக்கும், குறிப்பாக, மிகவும் நலிவடைந்துள்ள நம் சகோதர சகோதரிகளுக்கு அக்கறை காட்டும் எதிர்காலத்தை நம்மால் அமைக்க முடியும்.  இம்முயற்சியில் திருஅவையின் அர்ப்பணத்தையும், ஒத்துழைப்பையும் அரசுத்தலைவர் உறுதியாகப் பெற முடியும்.

அன்பு நண்பர்களே, இத்திருத்தூதுப்பயண நாள்களை ஆர்வத்தோடும் நம்பிக்கையோடும் நோக்குகின்றேன். ஈக்குவதோர் நாடு வெளிக் கோளத்திற்கு மிக அருகில் இருக்கிறது. அந்நாட்டிலுள்ள உயரமான Chimborazo மலைச் சிகரத்தை வைத்து இவ்வாறு கூறப்படுகின்றது. இதனாலேயே Chimborazo, கதிரவனுக்கும், நிலாவுக்கும், விண்மீன்களுக்கும் மிக அருகில் உள்ளது என அழைக்கப்படுகின்றது. கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவை கதிரவனோடும், விசுவாசிகள் குழுவாகிய திருஅவையை நிலாவோடும் அடையாளப்படுத்துகிறோம். நிலா, தனது ஒளியைக் கொண்டிருக்கவில்லை. நிலா, கதிரவனிடமிருந்து மறைந்திருந்தால் அது இருளாய் இருக்கும். கதிரவன் இயேசு கிறிஸ்துவே. திருஅவை, இயேசு கிறிஸ்துவிடமிருந்து விலகினால் அது இருளாக இருக்கும் மற்றும் அது சாட்சியம் பகர முடியாது.  கிறிஸ்துவே நம்மை மீட்பவர். யாருமே தனது சொந்த ஒளியைக் கொண்டிருக்க முடியாது. மேலிருந்து உதிக்கும் கதிரவன் எவ்வளவு அருகில் இருக்கிறார் என்பதை வருகின்ற நாள்கள் நமக்கு அதிகமாகத் தெளிவுபடுத்தட்டும். நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் ஒளி மற்றும் அன்பின் உண்மையான பிரதிபலிப்பாக இருப்போம்.

இந்த இடத்திலிருந்து ஈக்குவதோரை அரவணைக்க விரும்புகிறேன். Chimborazo சிகரத்திலிருந்து பசிபிக் கடற்கரை வரை, அமேசான் மழைக்காட்டிலிருந்து Galapagos தீவுகள் வரை நான் அரவணைக்க விரும்புகிறேன். சிறியதும், எளியதுமானதை பராமரிப்பதில், உங்கள் சிறாரையும் முதியோரையும் பராமரிப்பதில், இளையோரில் நம்பிக்கை வைப்பதில் ஒருபோதும் சக்தி இழக்காதீர்கள். உங்கள் மக்களின் மற்றும் உங்கள் நாட்டின் தனிப்பட்ட அழகால் தொடர்ந்து தொடப்படுங்கள். உங்கள் நாடு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இயேசுவின் மற்றும் அன்னைமரியின் திருஇதயங்கள் உங்களுக்குத் தேவையான அனைத்து வரங்களையும் அருள்வார்களாக. நன்றி.

இவ்வாறு ஈக்குவதோர் நாட்டின் கிட்டோ “Mariscal Sucre” பன்னாட்டு விமான நிலையத்தில் தனது முதல் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.         

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.