2015-07-04 15:58:00

நசுக்கப்படும் கிறிஸ்தவர்கள் நம் உடன்பிறப்புகள்


ஜூலை,04,2015. கிறிஸ்துவுக்காகத் தங்களின் இரத்தத்தைச் சிந்தும் துன்புறும் கிறிஸ்தவர்கள் அனைத்துக் கிறிஸ்தவர்களையும் ஒன்றிணைக்கின்றனர் என்றும்,   இக்கிறிஸ்தவர்கள் நம் உடன்பிறப்புகள், நம் மறைசாட்சிகள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய கத்தோலிக்க அருங்கொடை இயக்கத்தின் 38வது மாநாட்டில் கலந்துகொண்ட முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களை இவ்வெள்ளி மாலை 6 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் சந்தித்து, செபித்து உரையாற்றிய  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

இயேசு வாக்களித்துள்ள தூய ஆவியாரை, தந்தையே இறைவா எமக்கு அனுப்பும், தூய ஆவியார் ஒன்றிப்பை நோக்கி எம்மை வழிநடத்துவாராக என்று செபித்த திருத்தந்தை, கடும் வெயிலாக இருந்த அந்நேரத்தில் பெய்த மழையும் இறைவனின் செயல், இதையும் வரவேற்போம் என்று கூறினார்.

சில மாதங்களுக்கு முன்னர், லிபியக் கடற்கரையில் 23 காப்டிக் கிறிஸ்தவர்கள் தலைவெட்டப்பட்டு இறந்தனர், அந்நேரத்தில் அவர்கள் இயேசுவே என்றனர், இவர்கள் கத்தோலிக்கர் அல்ல, ஆனால் கிறிஸ்தவர்கள், அவர்கள் நம் உடன்பிறப்புகள், நம் மறைசாட்சிகள், இது கிறிஸ்தவ ஒன்றிப்பு இரத்தம் என்று கூறினார் திருத்தந்தை.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், உகாண்டா நாட்டு இளம் மறைசாட்சிகளைப் புனிதர்களாக அறிவித்தார், இதே கிறிஸ்தவ விசுவாசத்திற்காக இவர்களின் ஆங்கிலக்கன் வேதியரும், அவரின் தோழர்களும் கொல்லப்பட்டனர், இது கிறிஸ்தவ ஒன்றிப்பு இரத்தம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வெள்ளி கத்தோலிக்க அருங்கொடை இயக்க நிகழ்வில் பிற கிறிஸ்தவ சபைகள் மற்றும் பிற திருஅவை சமூகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.