2015-07-04 16:17:00

சமய சுதந்திரத்திற்கு முன்னுரிமை கொடுக்க வலியுறுத்தல்


ஜூலை,04,2015. ஒருவரை ஒருவர் மதித்தல் மற்றும் புரிந்துகொள்தலை ஊக்குவிக்கும் செயல்கள் வழியாக, சமய சுதந்திரத்தையும் மத நம்பிக்கையையும் வலுப்படுத்துவது,  OSCE பகுதியின் அமைதியான நல்லிணக்க வாழ்வுக்கு முக்கிய படிக்கல் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

வியான்னாவிலுள்ள OSCE மற்றும் பிற ஐ.நா. நிறுவனங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Janusz Urbanczyk அவர்கள், சமய சுதந்திர உரிமை, ஒருவரை ஒருவர் மதித்தல், புரிந்துகொள்தல் போன்ற தலைப்புகளில் இவ்வாரத்தில் நடைபெற்ற கூட்டங்களில் ஆற்றிய பல உரைகளில் இவ்வாறு கூறினார்.

OSCE என்ற ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்தைச் சார்ந்த நாடுகளின் பல்வேறு பகுதிகளில், சமய சுதந்திரம் அல்லது சமய நம்பிக்கை மீறப்படுவது அண்மை ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றது, அதோடு, சமய சகிப்பற்றதன்மையும் சமயப் பாகுபாடுகளும் அதிகரித்து வருகின்றன என்று பேராயர் Urbanczyk அவர்கள் கூறினார்.

உலக சமுதாயம், சமய சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென திருப்பீடம் எதிர்பார்க்கின்றது என்றுரைத்த பேராயர் Urbanczyk அவர்கள்,  ஐரோப்பாவில் மீண்டும் தலைதூக்கும் சமய வெறுப்புக் குற்றங்களையும் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.