2015-07-04 16:32:00

கடுகு சிறுத்தாலும் - "இப்போது நாங்கள் எங்கே செல்வது?"


"இப்போது நாங்கள் எங்கே செல்வது?" என்ற திரைப்படம், 2011ம் ஆண்டு லெபனான் நாட்டில் உருவாக்கப்பட்டது. இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே உள்ள உறவுப் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் அது.

ஒரு கிராமத்தில் கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் எவ்வித பாகுபாடும், கருத்து வேறுபாடும் இன்றி மகிழ்வுடன் வாழ்ந்து வருகின்றனர். நாளடைவில், உலகின் வேறு பகுதிகளில் நடைபெறும் மதக்கலவரங்கள் பற்றியச் செய்திகள் இந்த கிராமத்து மக்களையும் பாதிக்கின்றன. பாகுபாடுகள் எழுகின்றன. இந்தப் பாகுபாடுகளை விரும்பாத அந்த கிராமத்து அன்னையர், ஊரில் ஒற்றுமை நிலவப் பாடுபடுகின்றனர். இளையோரும் ஆதரவு தருகின்றனர். இந்தச் சூழலில், அந்த கிராமத்து இளைஞன் ஒருவர் பக்கத்து ஊருக்குச் ஏதோ ஒரு வேலையாகச் செல்கிறார். அங்கு நடந்த ஒரு மதக்கலவரத்தில் அவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். அவரது உடல் கிராமத்திற்குக் கொண்டுவரப்படுகிறது.

தங்கள் நண்பனின் உடலைப் புதைப்பதற்கு அந்த கிராமத்து இளையோர் செல்கின்றனர். இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களும் இணைந்துசெல்லும் அந்த இளையோர் கூட்டம் கல்லறையை அடைகிறது. அங்கு கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் தனித் தனி கல்லறைகள் பிரிக்கப்பட்டுள்ளன. அருகருகே இந்தக் கல்லறைகள் இருந்தாலும், இடையே செல்லும் பாதை இரு கல்லறைகளையும் பிரித்துக் காட்டுகிறது. அந்தப் பாதையில் தங்கள் நண்பனின் உடலைச் சுமந்து செல்லும் இளையோர் திடீரெனத் திரும்பி, இப்போது நாங்கள் எங்கே செல்வது? என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இந்தக் கேள்வியைத் திரை அரங்கத்தில் உள்ளவர்களை நோக்கிக் கேட்பதுபோல் இக்காட்சி பதிவாகியுள்ளது. இந்தக் கேள்வியோடு திரைப்படம் முடிகிறது.

பிறந்தது முதல் இறக்கும் வரை.... ஏன்? இறந்த பின்னரும் பாகுபாடுகளால் இவ்வுலகைக் கூறுபோட்டு வைத்திருக்கிறீர்களே... இப்போது நாங்கள் எங்கே செல்வது என்று இளையோர் நம்மைக் கேட்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.