2015-07-02 15:44:00

“நூறு கோடி சுற்றுலாப் பயணிகள், நூறு கோடி வாய்ப்புகள்”


ஜூலை,02,2015. “நூறு கோடி சுற்றுலாப் பயணிகள், நூறு கோடி வாய்ப்புகள்” என்ற தலைப்பில், இவ்வாண்டு உலக சுற்றுலா தினத்திற்கென இவ்வியாழனன்று செய்தி வெளியிட்டுள்ளது, குடிபெயர்வோர் மற்றும் புலம்பெயர்வோர்க்கு மேய்ப்புப்பணியாற்றும் திருப்பீட அவை.

வருகிற செப்டம்பர் 27ம் தேதி சிறப்பிக்கப்படும் உலக சுற்றுலா தினத்திற்கென இத்திருப்பீட அவை வெளியிட்டுள்ள செய்தியில், 2012ம் ஆண்டில் உலகில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நூறு கோடியைத் தாண்டியது, இவ்வெண்ணிக்கை 2030ம் ஆண்டில் இருநூறு கோடியை எட்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை உயர்வு, சுற்றுலாவோடு தொடர்புடைய அனைத்துப் பிரிவுகளுக்கும்   முன்வைத்துள்ள சவாலையொட்டி, உலக சுற்றுலா நிறுவனம், “நூறு கோடி சுற்றுலாப் பயணிகள், நூறு கோடி வாய்ப்புகள்” என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளது என்றும் அச்செய்தி கூறுகிறது.

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதை மையப்படுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘இறைவா உமக்கே புகழ்’(Laudato si') புதிய திருமடல், உலகச் சுற்றுலாவில் பின்பற்றப்பட வேண்டிய முக்கிய வழிகாட்டிகளை வழங்குகின்றது என்றும் அச்செய்தி கூறுகிறது.

உலகில் அமைதியைக் கட்டியெழுப்பும் பாதைகளுக்கு சுற்றுலாப் பிரிவு நூறு கோடி வாய்ப்புகளை வழங்குகின்றது, அதேபோல் சுற்றுலாக்கள், சந்திப்பு, பகிர்வு, நல்லிணக்கம் போன்றவற்றுக்கும் உதவுகின்றது என்றும் அச்செய்தி கூறுகிறது.

இச்செய்தியில், குடிபெயர்வோர் மற்றும் புலம்பெயர்வோர்க்கு மேய்ப்புப்பணியாற்றும் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò, அதன் செயலர் ஆயர் ஜோசப் கலத்திப்பரம்பில் ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.