2015-07-02 16:05:00

அனல் காற்றிலிருந்து காத்துக்கொள்வதற்கு ஐ.நா. வழிகாட்டிகள்


ஜூலை,02,2015. காலநிலை மாற்றம் தொடர்புடைய கடும் வெப்பக் காற்றினால் உடல்நிலை பாதிக்கப்படும் மக்களுக்கு புதிய வழிகாட்டிகளை முதன்முறையாக வெளியிட்டுள்ளன ஐ.நா. நிறுவனங்கள்.

கடும் அனல் காற்றினால் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் கடந்த மாதத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளவேளை, ஐரோப்பாவையும் கடும் வெப்பம் அச்சுறுத்தி வருகிறது.

இதை முன்னிட்டு, ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனமும்(WHO), உலக வானியல்    நிறுவனமும்(WMO) இணைந்து, “வெப்பக்காற்றும், நலவாழ்வும்” என்ற தலைப்பில் வழிகாட்டிகளை வெளியிட்டுள்ளன.

இப்புவியின் காலநிலை மாற்றத்தால் உலக அளவில் அனல் காற்று கடுமையாக, அடிக்கடி வீசுகின்றது என்றும், அனல்காற்று தன்னிலே ஆபத்தானது, எனவே ஒவ்வொருவரும் அதிகக் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும் இந்நிறுவனங்கள் கேட்டுள்ளன.

அதிக வெப்ப ஆண்டுகளாக பதிவுசெய்யப்பட்டுள்ள 15 ஆண்டுகளில், 14 ஆண்டுகள் 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று WMO நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.