2015-07-01 17:05:00

பாலியல் வன்கொடுமை வழக்கில் சமரசத் தீர்வுக்கு இடமில்லை


ஜூலை,01,2015. பாலியல் வன்கொடுமை வழக்கை சமரச மையத்துக்கு பரிந்துரைப்பது, வன்கொடுமை செய்த நபரையே பாதிக்கப்பட்ட பெண் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பரிந்துரைப்பது, பெண்ணின் மாண்புக்கு எதிரானது என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் மத்தியப் பிரதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

மேலும், மத்தியப் பிரதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் மாண்புக்கு எதிரானது எனவும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்த நபருடன் பெண் ஒருவருக்கு திருமணத்தை பரிந்துரைத்து வழக்கை சமரசம் செய்வதாக மத்தியப் பிரதேச நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியிருந்தது.

திருமணம் என்ற பெயரில் சமரசம் செய்வதால் ஒரு பாலியல் வன்கொடுமை குற்றவாளி தங்கு தடையின்றி சுதந்திரமாக நடமாட நீதிமன்றம் வழிவகை செய்துள்ளது. மேலும், மத்தியப் பிரதேச நீதிமன்ற உத்தரவை இரத்து செய்வதோடு, வழக்கை மறுவிசாரணை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.