2015-07-01 16:41:00

பயங்கரவாதத்திற்குரிய காரணங்கள் கண்டறியப்பட வேண்டும்


ஜூலை,01,2015. உலகில், குறிப்பாக, மத்திய கிழக்கிலும், ஆப்ரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் பயங்கரவாதத்தைத் தடை செய்வதிலும், அதனை ஒழிப்பதிலும்,  அனைத்துலக சமுதாயம் எப்போதும் திறமையுடன் செயல்படவில்லை என்று ஐ.நா. கூட்டமொன்றில் கூறினார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தின் மீது பயங்கரவாதம் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் அவை இச்செவ்வாயன்று ஜெனீவாவில் நடத்திய கலந்துரையாடலில் உரையாற்றிய பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தின் மீது பயங்கரவாதம் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள் குறித்து நாம் சிந்திக்கும்போது, பயங்கரவாதம் பற்றிய காரணங்கள் தெளிவாக இல்லாமலும், இதனை ஒழிப்பதற்கு நாடுகளும், அனைத்துலக சமுதாயமும் விரைவாகச் செயல்படாமலும் இருக்கும்வரை இவை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று எச்சரித்தார் பேராயர் தொமாசி.

பயங்கரவாதம் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள் உண்மையிலேயே மேலும் அதிகரிக்கும் என்றும் கூறினார், ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளரான பேராயர் தொமாசி.

பயங்கரவாதம், மனிதர்களையும் ஆயுதங்களையும் வர்த்தகம் செய்வதை எளிதாக்குகின்றது என்றும், இது மனித வர்த்தகத்திற்கு கறுப்புச் சந்தையை உருவாக்குகின்றது என்றும் தெரிவித்த பேராயர், பழுதுபார்க்க முடியாத சமூக மற்றும் கலாச்சார அழிவுகளையும் ஏற்படுத்திவரும் பயங்கரவாதம் வருங்காலத் தலைமுறைகளையும் பாதிக்கும் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.