2015-07-01 17:16:00

உலகில் 240 கோடிப் பேருக்கு அடிப்படை நலவாழ்வு வசதிகள் குறைவு


ஜூலை,01,2015. உலகளவில் நலவாழ்வு வசதிகள் அமைத்துக் கொடுப்பதில் முன்னேற்றம் தெரிந்தாலும், இப்புவியில் மூன்று பேருக்கு ஒருவர் வீதம் அடிப்படை நலவாழ்வு வசதிகளின்றி இன்னும் உள்ளனர் என்று ஐ.நா. கூறியுள்ளது.

“நலவாழ்வு மற்றும் குடிநீர் வசதியில் முன்னேற்றம் : மில்லேன்யத் திட்டம்” என்ற தலைப்பில் ஐ.நா.வின் யூனிசெப் குழந்தைகள் அமைப்பும், உலக நலவாழ்வு நிறுவனமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளன.

இயற்கை உபாதைகளுக்குத் திறந்தவெளியைப் பயன்படுத்தும் 94 இலட்சத்து 60 ஆயிரம் பேர் உட்பட 240 கோடிப் பேருக்கு நலவாழ்வு வசதிகள் குறைவுபடுகின்றன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

அனைத்து மனிதருக்கும் நலவாழ்வு மற்றும் குடிநீர் வசதிகள் அமைத்துக் கொடுக்கப்படாதவரை, தண்ணீர் தொடர்புடைய நோய்களால் நிறையப் பேர் தொடர்ந்து இறந்து கொண்டிருப்பார்கள் என்று, WHO நிறுவனத்தின் பொதுநலப் பிரிவின் இயக்குனர் மருத்துவர் Maria Neira அவர்கள் கூறினார்.

உலகில், 1990ம் ஆண்டுக்குப் பின்னர் ஏறக்குறைய 260 கோடிப் பேர் குடிநீர் வசதியைப் பெற்றுள்ளனர். உலக மக்கள் தொகையில் 68 விழுக்காட்டினரின் நலவாழ்வு வசதிகள் முன்னேறியுள்ளன. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.